பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6. பழிக்கு அச்சம் !

‘ஏன் ஐயா, இவ்வளவு அஞ்சுகிறீர்கள்?’ என்று. சிலரைக் கேட்கிறோம். வேறு எந்த வகையில் நட்டம் ஏற்பட்டாலும் கவலைப்பட மாட்டேன்; ஆனால், அநியாயமாக வரும் பழிக்கு அஞ்சுகிறேன்!' என்கின்றார் அவர். பழிக்கு அஞ்சுவதாகக் கூறும் அவரைப் பார்த்து, 'பழி என்பது என்ன?’ என்று கேட்டால், அவர் என்ன பதில் கூறுவார்? பழிக்கு அஞ்சுவதாகக் கூறுபவருள் பலரால் பழி என்பது என்ன என்பதை விளக்க முடியாது.

பழி என்பது என்ன? ஒருவன் செய்யத் தகாத காரியத்தைச் செய்துவிட்டால் பிறர் அவனைக் குறை. கூறுகின்றனர். இவ்வாறு குறை கூறுவதைப் 'பழித்துக் கூறுதல்’ என்று சொல்லலாம். அப்படியானால் பழிக்கு உரிய செயல்கள் யாவை? எதைச் செய்தாலும் சிலர் இகழவும் சிலர் புகழவும் செய்வர். அனைவரும் புகழக் கூடிய காரியம் என்பது ஒன்றும் இல்லை. தீங்கு என்பதைக் கனவிலும் அறியாத இயேசுநாதரையும், மகாத்துமா காந்தியையும் பழித்தவர்கள் உண்டு. ஏன்? அவர்களைக் கொன்றவர்களும் உண்டு. இவ்வாறு. கூறுவதனால் பிறர் கூறுவதைப் பற்றிக் கவலையே. படவேண்டா என்பது கருத்தன்று.

ஒருவன் தான் செய்யும் காரியங்களைப்பற்றிப் பிறர் என்ன கூறுவார்கள் என்று சிந்திப்பது அவசியம்தான்.