பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 31


குற்றம் என்று நினைக்கமாட்டார்கள். ஏன்? பிறர் எடுத்துக்காட்டிய இடத்தும் குற்றம் என்று உணர மாட்டார்கள். இதுவே நமக்கும் பெரியோர்க்கும் உள்ள வேறுபாடு. மிகச் சிறிய குற்றம் தம்மிடம் நிகழ்ந்து விட்டாலும், அதை மிகப் பெரிதாக நினைந்து வருந்துவர் பெரியோர். நாம் அன்றாடம் செய்துகொண்டு அது பற்றிக் கவலைப்படாத ஒரு சிறிய குற்றத்தை 'இமய மலையை ஒத்த பெருங்குற்றம் (Himalayan Blunder) என்று கூறி வருந்தினார் மகாத்துமா.

காஞ்சீபுரத்தில் ஏகாலியார் ஒருவர் வாழ்ந்தார். ஊராருக்கெல்லாம் துணி வெளுக்கும் வண்ணார் அல்லர் அவர்; இறைவனுடைய அடியார்களின் துணியை விருப்பத்துடன் வெளுத்துத் தருபவர். அவர்கள் தாங்களே வந்து அவரிடம் துணியைச் சலவை செய்யத் தருவதில்லை. ஆனால், அவராக அவர்களைத் தேடிச் சென்று அவர்களுடைய துணிகளைப் பெற்று வெளுத்துத் தருவார். இவ்வாறு செய்வதையே அந்த ஏகாலியார் தம்முடைய வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டிருந் தார் அடியார்கள் வாய்விட்டுக் கேளாமல் இருப்பவும், அவரே அவர்களுடைய விருப்பத்தை அறிந்து வெளுத்துத் தந்தமையின், அந்த ஏகாலியாருக்குத் 'திருக்குறிப்புத் தொண்டர்' என்ற காரணப் பெயரும் உண்டாகி விட்டது

இந்தப் பரந்த உலகில் ஒரு நிகழ்ச்சியை அனைவரும் காணலாம். எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் வரை ஒரு தொல்லையும் இல்லை. ஆனால், வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை மேற்கொண்டால் உடனே அதற்குப் பல விதமான தடைகள் ஏற்படுவதுதான் இயல்பு. நாம் வேறு வேலையாகத் தெருவில் நிற்கும் பொழுது, நம் அலுவலகத்திற்குப் போகக்கூடிய பஸ் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நிற்கும். ஆனால், நாம் அந்த பஸ்ஸுக்கு என்று வந்து காத்துக் கொண்டு நிற்கையிலேதான் அதைத்