பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 39


தாமே உண்ண வேண்டும் என்று நினைத்த தேவர்கள் எங்கே! அமிழ்தமாகிய அந்த நெல்லிக் கனியைத் தான் உண்ணாமல் சாகப் போகும் கிழவியாருக்குத் தந்த அதியமான் எங்கே!

அடுத்தபடியாகச் சிவபெருமான் நினைவு வந்தது. பாட்டியாருக்கு. ஏன் தெரியுமா? சிவபெருமானுக்குப் பங்கு தரக்கூடாதென்று அவனை ஒதுக்கினார்கள் தேவர்கள். கடைசியில் அமிழ்தத்திற்குப் பதிலாக ஆலகால விஷம் வந்தது பாற்கடலில். அந்த நஞ்சுக்கு அஞ்சி இறைவனிடம் ஓடினார்கள்; முறை இட்டார்கள். அவர்கள் தன்னை ஏமாற்ற முயன்றதை மன்னித்தான் இறைவன். ஆலகால நஞ்சை எடுத்துத் தான் உண்டான். தேவர்கள் வாழவேண்டி அவர்கட்கு அமிழ்தத்தைத் தந்துவிட்டுத் தான் நஞ்சை உண்டானே சிவபெருமான்!

அதே போன்று பாட்டியாருக்கு அமிழ்தம் போன்ற நெல்லிப்பழத்தைக் கொடுத்துவிட்டுத் தான் சும்மா இருந்துவிட்டானே அதியமான்! அதிலும் ஒரு சிறப்பு உண்டு. அந்தப் பழத்தின் தன்மை இத்தகையது என்று கூறினானா? கூறியிருந்தால் பாட்டியார் அதை உண்டிருப்பாரா? கொடுப்பதிலும் ஒரு சிறப்பு என்னவெனில், வாங்குபவர் மனம் வருந்தாமல் கொடுப்பதுதான். அவ்வாறு இன்று எத்துனைப் பேர் செய்கின்றனர்? முக்கியமான ஒன்றைக் கொடுப்பதன் முன், அது நமக்கு எவ்வளவு முக்கியம் என்றும், மிகவும் கஷ்டப்பட்டுக் கொடுப்பதாகவும், அதனுடைய பெருமையையும், தம் பெருமையையும் வாங்கிக் கொள்பவர் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் பாடுபடுகின்றனர். இதனால் கொடுப் பதன் பயனே இல்லாமல் போய்விடுகிறது.

அதியன் இன்னது என்று கூறாமல் கொடுத்து நெல்லிக் கனியை உண்ணச் செய்தான். அச்செயலைக் கண் ட அவ்வைப் பாட்டியார் அவனை வாழ்த்துகிறார்.