பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 55


காலங்களில் ஒருவன் எல்லாவற்றையும் தானே படித்து அறிந்து கொள்வது என்பது இயலாத காரியம். கேள்வி ஞானத்தால் அறிவைப் பெருக்கிக்கொள்ளுதல் மிகவும் தேவை. -

இதன் இன்றியமையாமையைக் கருதியே வள்ளுவர் 'கேள்வி’ என ஒர் அதிகாரமே வகுத்துள்ளார். தானாகவே எல்லா நூல்களையும் படித்து அறிவு பெற்றவனுக்கும், பிறரிடம் கேள்வி ஞானத்தால் அறிவு பெற்றவனுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு.

பெரிய நூல் ஒன்றைத் தானே கற்ற ஒருவன், தன்னுடைய கல்வியின் பெருக்கத்தை நினைந்து கர்வம் கொள்ளுதல் இயல்பு. ஏனென்றால், அவனைச் சுற்றியுள்ளவர்கள் அந்நூலைப்பற்றி ஒன்றும் அறியாமலிருக்கும் பொழுது, அவன் மட்டும் பொறுமையோடு அதனைக் கற்று முடித்துவிட்டான் ஆதலின், சுற்றியிருப்பவர் களோடு தன்னை ஒப்பிட்டுக் கர்வம் கொள்ளுகிறான். ஆனால், பிறரிடம் அதே நூலைக் கேட்டுக் கேள்வி ஞானத்தால் அறிபவன், அந்நூலை அறிந்துகொள்வதோடு அதனைச் சொல்லித் தருபவருடைய அறிவின் விசாலத்தை யும் அறிந்து கொள்ளுகிறான். இங்ஙனம் பல பேரிடம் பெரிய விஷயங்களைக் கேட்கக் கேட்க ஒருவனுடைய அறிவு விசாலம் அடைவதோடு மற்றவருடைய அறிவு விசாலத்தை அவன் அறிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இப்படிச் சொன்னவுடன் அனைவருமே கேள்வியின் மூலம் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளலாம் போலிருக்கிறதே என்று நினைந்துவிட வேண்டா. பெரியவர் ஒருவர் சொற்பொழிவு செய்வதை ஆயிரக்கணக்கான மக்கள் சென்று அப்படியே கேட்டுவிட்டு வருகிறார்கள். அப்படி வருகிறவர்களிடம் 'பெரியவர் என்ன பேசினார்?' என்று கேட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும்.