பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2 O அ. ச. ஞானசம்பந்தன்


அறச்சட்டங்கள், பலரால் பல காலத்தில் கடைப்பிடிக்கப் பெற்றவைகளே. சாதாரண மக்களும் கடைப்பிடிக்கக் கூடிய பல சட்டங்களையும் அந்நூல் பேசுகின்றது. ஒருசிலரால் மட்டுமே கடைப்பிடிக்கக்கூடிய சில கடினமான சட்டங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கியங்களைப் புரட்டினால், எத்தனை பெருமக்க ளுடைய வாழ்வு எத்தனை திருக்குறள்கட்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளன என்பது புலப்படும்.

திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள பகுதி 'சேதி நாடு’ என்று வழங்கப் பெற்றது ஒரு காலத்தில் அப்பகுதியைத் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு, 'மெய்ப்பொருள்’ என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார்.

"குறிக்கோள் இல்லாது கெட்டேன்!” என்று திருநாவுக்கரசரே பாடுவாரானால், மனித வாழ்வில் குறிக்கோள் எத்துணைச் சிறந்தது என்று எடுத்துக் கூறத் தேவை இல்லை. பலருக்குத் தலைவனாய் அமைந்துள்ள அரசனுக்குக் குறிக்கோள் என்பது எவ்வளவு இன்றி யமையாதது! தம் உயிருக்குத் தீமை நேர்வதாயினும், அது பற்றிக் கவலையுறாமல், குறிக்கோளைக் கொண்டு செலுத்துபவரையே உலகம் 'மகாத்மா' என்று போற்றுகிறது.

சேதி நாட்டை ஆட்சி செய்து வந்த மெய்ப்பொருளும், ஒரு குறிக்கோளுடன் வாழ்ந்தார். சிவபெருமானுடைய அடியார்கள் தாங்கும் வேடத்தை யார் தாங்கி வந்தாலும், அவரைப் போற்றி உபசரித்து அவர் விரும்பியவற்றைக் கொடுக்க வேண்டும் என்பதே மெய்ப்பொருள் மேற் கொண்ட குறிக்கோளாகும். இந்தக் குறிக்கோள் சரியானதா, தவறானதா என்பது பற்றி ஆராய நமக்கு உரிமை இல்லை. எதுவரை இதனை அவர் கொண்டு செலுத்துகிறார் என்பதை மட்டுமே நாம் காண்டல் வேண்டும்.