பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 75


பொழுது அந்தப் பெயருக்கு அவன் தகுதியற்றவனாகிறான்.

மனித மனத்தின் விந்தையான இயல்பு. எப்பொழுதும் ஒன்றைப் பற்றிக்கொண்டு இருப்பதே ஆகும். ஒன்றையும் பற்றாமல் இம்மனம் இருக்கவேண்டும் என்று நினைத்தால், அது முடியாத காரியம் என்றுகூடச் சொல்லிவிடலாம்.

மனித மனத்தின் இந்த இயல்பை நன்கு அறிந்த பெரியவராகிய தாயுமானவர், “மதம் பொருந்திய யானை யைக்கூட வசப்படுத்தி நடத்திவிடலாம்; கரடி, கொடுமை யான புலி என்பவற்றைக்கூட அடக்கிவிடலாம்;" என்றெல்லாம் சொல்லி, இறுதியாக, "சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது!" என்று கூறினார். நம் காலத்திற்குச் சற்று முன்னர் வாழ்ந்த இராமலிங்க வள்ளலாரும், “மனம் எனும் ஒர் பேய்க் குரங்கே," என்று கூறியுள்ளார்.

மனத்தை அடக்கி, ஒருநிலைப்படுத்தி, நல்ல வழியில் திருப்பினாற்றான் வாழ்க்கையின் பயனை அடைய முடியும் என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். வாழ்க்கையின் பயனை அடைகின்றோமோ இல்லையோ, வாழ்கின்ற காலத்தில் அமைதியோடு, கவலையற்று வாழ வேண்டுமானால், அதற்கும் இந்த மன அடக்கம் தேவைப் படுகிறது. அடங்காத மனத்துடன் வாழ்க்கை நடத்துவது: பெரும் புயற் காற்றில், துடுப்பில்லாத மரக்கலத்தைக் கொந்தளிக்கும் கடலின் நடுவே செலுத்த முயல்வதைப் போலாகும்.

மனத்தை அடக்க வேண்டும் என்றால், ஒயாமல் ‘அடக்க வேண்டும், அடக்க வேண்டும்,’ என்று நினைப்பதால் பயன் ஒன்றும் ஏற்படாது. அதற்குப் பதிலாக மனத்தின் இயல்பை நன்கு அறிந்த பெரியவர்கள் ஒர் அழகான வழியைக் கூறினார்கள். அதாவது, “மனம்