பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 81


பெருங் காரியங்கள் செய்யும் பெரியோர்கள் கர்வம் கொள்ளவே முடியாது. எந்த வினாடியில் அவர்கள் கர்வம் கொண்டார்களோ, அந்த வினாடியிலேயே அவர்கள் பெரியவர்கள் என்ற பட்டத்தை இழந்து விடுவார்கள்.

இயேசுநாதர், நம்மாழ்வார், ஞானசம்பந்தர் முதல் மகாத்துமா காந்திவரை உள்ள பெரியவர்கள் யாரும் பெரிய காரியங்கள் பலவற்றைச் செய்திருப்பினும், தாங்கள் செய்ததாகக் கருதியதே இல்லை; எனவே, கர்வம் கொண்டதுமில்லை. இன்னும் கூறப்போனால், உலகில் உள்ள எல்லாரினும் தம்மைக் கீழானவர்களாகவே கருதினார்கள் இப்பெரியவர்கள்!

அவ்வாறு செய்வது மட்டும் பெரிய காரியமன்று; இவ்வாறே உண்மையில் நினைத்தார்கள்; எனவே, பெரிய வர்கள் ஆனார்கள். 'பணியுமாம் என்றும் பெருமை’ என்ற குறளை வாழ்ந்து காட்டிய பெருமை, இவ்வுலகப் பெரியவர் அனைவர்க்கும் உண்டு.

இனி அடுத்துள்ள கேள்வி, 'பெரிய காரியம் என்பது யாது?’ என்பதேயாகும். இதனை முடிவு செய்வது அவ்வளவு எளிதன்று. உலகில் இரண்டு பொருள்களை எடுத்துக்கொண்டு பெரியது சிறியது என்று கூறலாம்; ஆனாலும், குறிப்பிட்ட அந்த இரண்டு பொருள்களைப் பற்றிக் கூறுகின்ற வரையிலேதான் 'பெரியது சிறியது’ என்ற அடைமொழிகளும் பொருந்தும்.

சாதாரணமாகப் பாரம் தாக்கும் செயலை எடுத்துக் கொள்ளலாம். சிலர் ஒரளவு பாரத்தை எளிதாகத் தூக்கிவிடுகின்றனர். அதே பாரத்தைச் சிலர் தாக்க முடியாமல் விழிக்கின்றனர். முன்னவர் செய்கின்ற செயலைப் பார்த்து அனைவரும் வியப்பெய்துகின்றனர்.

ஒருவர் செய்ய இயலாது விழிக்கின்ற செயலை மற்றொருவர் எளிதாகச் செய்துவிடுவதைக் காண் கு – 6