பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 3


சிற்றரசர் ஆயினும், பண்பாடுடையவராயினும், மெய்ப்பொருளுக்கும் பகைவர் இல்லாமல் போகவில்லை. பக்கத்து நாட்டை ஆட்சி செய்த முத்தநாதன் என்பவன், அவருக்கு முழுப் பகைவனானான்; பல முறை மெய்ப் பொருளுடன் போர் தொடுத்துத் தோல்வியே அடைந்தான். பொருள் நட்டத்தோடு மானத்தையும் இழந்த முத்தநாதன், நல்லதொரு யோசனை செய்தான்; யநேரடியாகப் போர் செய்து மெய்ப்பொருளை வெல்ல முடியாது எனில், வேறு வழியில் அவரை ஒழித்துவிட முடியாதா?” என ஆராய்ந்தான். திருநீற்றுக்கும், அக்கமணிக்கும் (உருத்திராட்சம்) பெருமதிப்புத் தருபவர் மெய்ப்பொருள் என்பதை அறிந்த முத்தநாதன், உடனே அந்த வேடந் தாங்கிப் புறப்பட்டான்;

மெய் எலாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி
மைபொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்துப்
பொய்த்தவ வேடங் கொண்டு புகுந்தனன் முத்த நாதன்

உடம்பெல்லாம் திருநீற்றைப் பூசி, தலைமயிரைச் சடா முடியாகத் தூக்கிக் கட்டி, கையினில் கத்தியை மறைத்து வைத்துள்ள சுவடிக்கட்டு ஒன்றை ஏந்திக்கொண்டு புறப்பட்டான். அவன் புறப்பட்டது எவ்வாறு இருந்தது எனில், எரியும் திரி கறுப்பாய் இருந்தாலும் புறத்தே ஒளி காட்டுகின்ற விளக்கைப்போல, வெளியே திருநீறு முதலிய உயர்ந்த வேடத்தைத் தாங்கி, மனத்துள் மட்டும் தீய எண்ணத்தைக் கொண்டு புறப்பட்டான் என்று அழகாகக் கூறுகிறார் சேக்கிழார், தம்முடைய பெரிய புராணத்தில்.

அடியார் வேடந்தாங்கிப் பல வாயில்களையுங் கடந்து உள்ளே வந்துவிட்ட முத்தநாதனை, அரசனுடைய அந்தப்புரக் காவலாளனான தத்தன் என்பவன் கண்டு, அவனைச் சந்தேகித்து விட்டான். தன் ஐயத்தை