பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 85


சாதாரண மனிதன் செய்ய முடியாதவற்றையும் செய்கிறான். அச்செயல் தியாயமானதா அல்லவா என்பதை, அவன் நிலையிலிருந்து காண வேண்டுமே தவிர, நம்முடைய நிலையில் வைத்துப் பார்ப்பது தவறு. இவ்வாறு சொல்வது பொருத்தமற்றது போலத் தெரிகிறதா? இன்று கூடப் போர்ப் படையில் இருப்பவர் கட்குத் தனிச்சட்டம் உண்டு என்பதை மறந்துவிட வேண்டா. சாதாரண மனிதன் செய்யும் குற்றத்தை அவன் செய்தாற்கூட, சீரியல் (சிவில்) நீதி மன்றங்கள் அவனை விசாரிக்க முடியாதே!

இத்தகைய செயலை அனைவரும் செய்ய முடியும் என்று யாரும் கூறவில்லை. ஆனால், குறள் போன்ற

செயற்கு அரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கு அரிய செய்கலா தார்'

என்று கூறுபேயானால், அதன்படி வாழ்ந்த பெரியவர்கள் உலகில் ஒருவர் இருவராவது இருக்கத்தான் செய்வார்கள் என்பதையும் அறியவேண்டும். இதை உணர்ந்து, இச் செயலின் பின்னே உள்ள இயற்பகையாரின் மனநிலையை நன்கு உணர்ந்தே சேக்கிழார், செயற்கருஞ் செய்கை செய்த தீரர்’ என்ற பட்டத்தை இவருக்கு வழங்குகிறார். பிள்ளையை அறுத்து கறி சமைப்பதைக்காட்டிலும் நெஞ்சுத் துணிவும் துறவு மனப்பான்மையும் வேண்டும் இயற்பகையார் செய்த செயலைச் செய்வதற்கு என்பதை மட்டும் மனத்துட்கொள்ளுதல் போதுமானது.

குறள் கூறிய செயற்கருஞ்செயல் பல வகைப் படுமேனும், அவற்றுள் எல்லாம் தலை சிறந்தது பிறர் கனவிலும் கருத முடியாத இச்செயல் என்று கூறலாம்.