பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதாசிரியன் கனவு

          “பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் 
           திண்மை உண்டாகப் பெறின்”
                  
                                                -தமிழ் மறை

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் ஞானமும் மோனமும், அன்பும் அருளும், செம்மையும் சீர்மையும் மேலோங்கிக் கவியும் காவியமும் வீறுபெற்று வாழ்ந்த ஒரு காலத்தில் ஒலித்த குரல் இது! தமிழ்ப் பெண் எப்படி இருக்க வேண்டுமென்று இலக்கணம் வகுக்கிற குரல், கோபுரம் போல் உயர்ந்து, வானம் போல் பரந்து, மதிகடல் போல் ஆழ்ந்த சிறப்புடையது தமிழ்ப் பெண் குலம். தமிழ்ப் பெண்குலத்தின் வளை ஒலிக்கும் கைகளில் தான் வீரமும், ஈரமும், வெற்றியும், வாழ்வும் பிறந்து வளர்ந்திருக்கின்றன. அக் கைகளில் வளையோடு தமிழும் வாழ்ந்தது. தமிழோடு தமிழ்ப் பண்பும் வாழ்ந்தது. தமிழ்ப் பண்போடு குடியும் வளர்ந்தது.

இன்றும் நம்மைவிட்டு விலகிவிடாமல் காத்துவரும் பண்பையும், ஒழுக்கத்தையும் தமது குருதியோடு குருதியாகக் கலந்து நிற்கும் அறத்தையும் இப்படி நித்தியமாய் நிரந்தரமாய் நிர்மலமாய்த் தொடர்ந்துவந்து கொண்டிருக்கும்படி அளித்தவள் எந்தத் தமிழ் முதல் பெண்ணோ அவளுடைய பொன்னார்ந்த செந்தாமரைச் சீரடிகளை, வணங்கிவிட்டு இந்தக் கதையை எழுதத் தொடங்குகிறேன். இங்கே அந்த வாக்கியத்தை எழுதி முடிக்கும் போது மெய் சிலிர்த்துக் கண்களில் நீரரும்புகிறது. கோயிலுக்குள் நுழைவதுபோல் மனமும், உடலும் புலன்களும் தூய்மையை உணருகின்றன.

எப்போதோ இருந்து மறைந்து இப்போது இல்லாமற் போனாலும், என்னில் என்னுடைய இரத்தத்தில் என்னுடைய புனிதமான நினைவுகளில் கலந்து வாழ்ந்து வரும் அந்த மாபெரும் தாய்க் குலத்தை நினைக்கிறேன்! அப்படி நினைக்கும் போது என் உடலில், உயிர் நாடிகளில் ஒரு புதிய சக்தி பாய்வதை அறிகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/11&oldid=1233349" இலிருந்து மீள்விக்கப்பட்டது