பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 113

நீ உயர்ந்து நிற்கிறாய்! நினைக்கின்றவர்கள் மனத்தில் வித்தாக விழுந்து எண்ணங்களாக முளைக்கிறாய்' என்று தேவாரத்தில் வருகிற கருத்து தான் பொருத்தமாகத் தோன்றியது பூரணிக்கு. அவனுடைய மனத்தின் எல்லை பெரியது. அவனோடு பேசிக் கொண்டிருந்ததில் நேரம் கழிவதே தெரியவில்லை. முகத்தையும் சிரிப்பையும் போலவே பேச்சும் கவர்ச்சியாயிருந்தது அவனுக்கு. வெளியே இருந்தாற் போலிருந்து திடீரென்று மழை தூறத் தொடங்கியிருந்தது. முதலில் தூறலாக இருந்த மழை சிறிது நேரத்தில் தெருவில் நடந்தால் நனைந்து போய் விடுகிற அளவுக்கு வலுத்து விட்டது. பூரணி அச்சகத்தின் சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தரை ஆவதற்கு இருந்தது.

'அடடா, உங்களோடு பேசிக்கொண்டிருப்பதில் நேரமானதே தெரியவில்லை. பத்தரை மணியோடு பஸ் போக்குவரத்து சரி! அப்புறம் நான் எப்படி ஊருக்குப் போவது?' என்று பரபரப்பாக கூறிக் கொண்டே புறப்பட எழுந்தாள் பூரணி.

'மழை பெய்கிறதே, எப்படிப் போவீர்கள்? நீங்கள் பஸ் ஸ்டாண்டுக்குப் போவதற்குள் கடைசிப் பஸ் போய் விட்டால் என்ன செய்வீர்களோ?"

"எப்படியாவது போய்ச் சேர்ந்தாக வேண்டுமே? வேறென்ன செய்வது? அவளுடைய தவிப்பு அரவிந்தனுக்குப் புரிந்தது. உள்ளே போய் ஒரு குடை கொண்டு வந்தான்.

'இதை நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள். நானும் பஸ் ஸ்டாண்டு வரையில் உங்களோடு வருகிறேன். கடைசி பஸ் போய்விட்டால் வேறு ஏற்பாடு செய்து கொள்ளலாம்' என்று அவளுடைய மறுமொழியை எதிர்பாராமலே கதவைப் பூட்டிக் கொண்டு கிளம்பி விட்டான் அரவிந்தன்.

'ஒரு குடைதானே இருக்கிறது; நீங்கள் எப்படி வருவீர்கள்? வீணாக நனைய வேண்டாம். நான் எப்படியாவது போய்க் கொள்கிறேன். நீங்கள் அலையாதீர்கள்' என்று சொல்லி விட்டுத் தெருவில் இறங்கிய பூரணியை அரவிந்தன் தனியாக விடவில்லை. பிடிவாதமாக உடன் புறப்பட்டு விட்டான்.

'அதனால் பரவாயில்லை எனக்குச் சிறு பிள்ளையிலிருந்தே மழையில் நனைவதென்றால் மிகவும் பிடிக்கும். வெய்யிலும்,

கு ம - 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/115&oldid=555839" இலிருந்து மீள்விக்கப்பட்டது