பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 குறிஞ்சிமலர் மழையும் வானம் பூமிக்குத் தரும் செளபாக்கியங்கள்; அவற்றை நாம் ஏன் வெறுத்துப் புறக்கணிக்க வேண்டும்!" என்று சொல்லி விட்டுச் சிறு குழந்தை போல் சிரித்துக் கொண்டு அவளைப் பார்த் தான் அவன். இருவரும் வேகமாக நடந்தார்கள். நல்ல மழை. அரவிந்தனை நனைய விட்டு தான் மட்டும் குடையின் கீழ் நனையாமல் போவது வேதனையாக இருந்தது பூரணிக்கு. அவனோ விளையாட்டுப் பிள்ளை போல் உற்சாகமாக மழையில் நனைந்து கொண்டு வந்தான். மனத்தில் இடம் கொடுத்து விட்டேன். குடையில் இடம் கொடுக்க ஏன் நாணப்பட வேண்டும்? என்று நினைவுகள் புரளும் மனத்தோடு தெரு விளக்கின் மங்கி நனைந்த மழை வெளிச்சத்தில் அவனைத் திரும்பிப் பார்த்தாள் அவள். -

அழகிய சிவந்த நெற்றியில் முத்து முத்தாக நீர்த்துளி உருள, அலை அலையாக வாரிப் படிந்த தலையில் ஈரம் மினு மினுக்க அரவிந்தன் வந்து கொண்டிருந்தான்.

'நீங்களும் உடன் வரலாம். நனையாதீர்கள்!' என்று அவளாகவே அருகில் நெருங்கிச் சென்று குடையை அவனுக்கும் சேர்த்துப் பிடித்தாள். வனப்பு மயமான அந்தப் பெண்ணின் பொன்னுடல் தனக்கு மிக அருகில் நெருங்கிய அந்த ஒரு கணத்து அண்மையில் மல்லிகைப் பூவின் மணமும் பன்னீரின் குளிர்ச்சியும் பச்சைக் கற்பூரத்தின் புனிதமும் ஒன்றாக இணைந்த ஒரு பவித்ர மயமான உணர்வு அரவிந்தனுக்கு ஏற்பட்டது. அந்த உணர் வில் அவனுடைய நெஞ்சும் உடலும் சிலிர்த்து ஓய்ந்தன. தாமரைப்பூ மலர்வது போல் மனத்தில் ஏதோ நெகிழ்ந்து இதழ்கள் பிரிந்தது. -

அடுத்த கணம் தன்னுணர்வுடன், "வேண்டாம்! இந்தச் சிறிய குடையில் இரண்டு பேர்கள் போவதனால் இரண்டு பேருமே நன்றாக நனைய நேரிடும். நீங்களாவது நனையாமல் வாருங்கள்' என்று சொல்லிப் புன்னகையோடு தானாகவே விலகிக் கொண்டு நடந்தான் அரவிந்தன். ஒரே ஒரு விநாடி அன்பில் நனைந்து மூழ்கிய பெருமிதத்தோடு மறுபடியும் அவள் அருகே மழையில் நனையலானான் அவன். பூரணி அனுதாபமும் அன்பும் மிதக்கும் கண்களால் அந்த வயது வந்த குழந்தையைப் பார்த்துக் கொண்டே கன்னக்கனிகள் கனிய முறுவல் பூத்தவாறே நடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/116&oldid=555840" இலிருந்து மீள்விக்கப்பட்டது