பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 குறிஞ்சிமலர் அவள் அதிகமாகத்தான் உருகினாள். அப்பா சொல்லியிருக்கிறார்; 'உலகத்திலேயே பெரிய சோகக் கதை இதுதான், அம்மா இந்தத் திலகவதி என்ற பெண்ணின் கதையைச் சேக்கிழார் எழுத் தாணியால் ஏட்டில் எழுதியிருக்க மாட்டார், பூரணி, ஏட்டில் எழுதுமுன் மனத்தில் இந்தப் பெண்ணைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் கண்ணிரால் பல முறை எழுதி எழுதி அழித்திருப் பாரம்மா அவர் ஒரு பெண்ணால் தாங்க முடியாத ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்தவள் திலகவதி. உடலால் செத்துப் போய்க்கொண்டே உள்ளத்தால் வாழ்கின்ற இந்தமாதிரிப் புனிதப்பெண் தமிழ் நாட்டில்தான் அம்மா பிறக்க முடியும். இந்தத் தமிழ் மண்ணில் அந்தப் பழைய புண்ணியம் இன்றும் மணத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தான் சில நல்ல காரியங்களாவது இன்னும் இந்த மண்ணில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. - இந்த வாக்கியங்களை அப்பாவின் வாயிலாகக் கேட்கும் போது தனக்கு முன் சேக்கிழாரின் புத்தகம் விரிந்து கிடப்பதை மறந்து விடுவாள் பூரணி. மாலை மாலையாக கண்ணிர் வடியும் அவள் கண்களில். கேட்டுக் கேட்டுக் கற்றுக் கற்று அனுபவித்து உணர்ந்த இந்தச் சோக அனுபவம் அன்று அவள் பேசிய பேச்சில் முழுமையாக எதிரொலித்தது. பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் மனமுள்ள இளகியவர்களுக்குக் கண்களில் ஈரம் கசிந்து விட்டது.

'திருவாரூரின் அழகிய வீதி ஒன்றில் ஒரு வேளாளர் வீடு. பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்ச்சி. அந்த வேளாளர் வீட்டில் இளமை அழகு மொட்டவிழ்ந்த முழுமலராய் ஒரு பெண். முல்லை நகை, முழுமதி முகம், மின்னல் நிற உடல், மணப் பருவம். வலது கையில் தம்பியைப் பிடித்துக்கொண்டு அவள் தன் வீட்டு வாயிலில் நிற்கிறாள். அழகு மலர்ந்து அனுபவிக்கக் கவிதைகளைத் தேடும் கருவண்டுக் கண்களாலே பார்த்துக் கொண்டு நிற்கிறாள் அந்தப் பெண். கண்களில் எவருடைய வரவையோ தேடுகிற ஆவல். பக்கத்தில் பால்வடியும் முகத்தோடு நிற்கும் சிறுவனாகிய அவள் தம்பிக்கு அக்காவின் ஆவலுக்குக் காரணம் விளங்க முடியாதுதான். யாரோ பல்லக்கில் வந்து இறங்குகிறார்கள். உள்ளே போய் அந்தப் பெண்ணின் பெற்றோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/140&oldid=555864" இலிருந்து மீள்விக்கப்பட்டது