பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 4 குறிஞ்சிமலர் நாங்களெல்லாம் மூன்று நாட்கள் சாப்பிட மாட்டோம் என்று பிடிவாதமாகக் குமுறி அழுதோம். படிப்பும், அனுபவங் களும் அவர் மனத்தை எவ்வளவுக்குக் கல்லாக்கியிருந்தன அப்போது. -

குழந்தைபோல் என்னை அனைத்துத் தலையைக் கோதிக்கொண்டே, "பூரணி நீ பச்சைக் குழந்தைபோல இப்படி அழுதுகொண்டிருந்தால் தம்பிகளையும் புதிதாகப் பிறந்திருக்கும் தங்கைப் பாப்பாவையும் யார் சமாதானப் படுத்துவது? துக்கத்தை மறந்துவிடப் பழகிக்கொள், அம்மா! இனிமேல் இந்தத் தம்பிகளுக்கும் அம்மா விட்டுப்போன தங்கைப் பாப்பாவுக்கும், நீ அக்கா மட்டுமில்லை, அம்மா மாதிரியும் இருந்து வளர்க்க வேண்டும். நீ தான் எனக்கு விவரம் தெரிந்த பெண் என்று பேர். நீயும் இப்படி அழுது முரண்டு பிடித்தால் நான் தனியாக யாரையென்று சமாதனப்படுத்துவேன் அம்மா?' என்று அறிவுரை கூறினாரே! தம்முடைய துன்பங்களையும், துக்கங்களையும், மட்டுமல்ல- சுகங்களையும் இன்பங்களையும் கூடப் பொருட் படுத்தாமல் மறந்து விடுகிற சுபாவம் அவருக்கு. கல்லூரி வகுப்பு அறைகளிலும், வீட்டில் புத்தக அலமாரிக்கு அருகிலுமே வாழ்க்கையின் பெரும்பான்மையான நேரத்தைக் கழித்து விட்டு மற்றவற்றை மறந்து கொண்டிருந்தவர் அவர். முறையாகப் பழுத்து உதிரும் கனியைப் போல் அறிவினால் காய்த்தன்மை வாய்ந்த சாதாரண உணர்ச்சிகளைச் சிறிது சிறிதாகத் தம்மை விட்டு நீக்கி விட்டவர் அவர். ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு விநாடியும் ஒழுங்காகவும் முறையாகவும் கழிப்பதற்குப் பழகிக்கொண்டிருந்த வாழ்க்கை அவருடையது.

'அப்பா போய் விட்டார்' என்பதற்கு ஒப்புக் கொண்டு நம்புவது மனத்துக்குக் கடுமையானதாகத்தான் இருந்தது. அந்த அழகு, அந்தத் தமிழ்க் கடல், அந்த ஒழுக்கம், அந்தப் பண்பாடு. அத்தனையும் மாய்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகிப் பொய்யாய்ப் பழங்கதையாகக் கற்பனையாய் மெல்லப் போய் விட்டன. நமக்கு வேண்டியவர்களின் மரணத்தை நம்பவோ ஒப்புக் கொள்ளவோ முடிவதில்லைதான். 'நின்றான், இருந்தான் கிடந்தான், தன்கேள் அலறச் சென்றான்' என்று வாழ்க்கையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/16&oldid=555740" இலிருந்து மீள்விக்கப்பட்டது