பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 169

முருகானந்தம் தையல் கடையைப் பூட்டிவிட்டுச் சாவிக் கொத்தை விரலில் கோத்துச் சுழற்றிக்கொண்டே வந்து சேர்ந்த போது மணி ஒன்பதே முக்கால். -

'இங்கே வேலை முடிய அதிக நேரம் ஆகும். நீ சாப்பிட்டாயிற்றா முருகானந்தம்?' என்று கேட்டான் அரவிந்தன்.

'அதெல்லாம் வரும்போது ஒட்டலில் முடித்துக் கொண்டு தான் வந்தேன். உன்னை நம்பி இங்கே வந்தால் நீ நாலு நிலக்கடலைப் பருப்பையும், பாதி வாழைப் பழத்தையும் கொடுத்துப் பட்டினி போடுவாய். முன்னெச்சரிக்கையாக நானே சாப்பாட்டை முடித்துக்கொண்டு வந்து விட்டேன். படுக்கை இங்கேதான். வீட்டுக்குச் சொல்லியனுப்பியாயிற்று என்று சிரித்துக் கொண்டே பதில் கூறினான் முருகானந்தம். அவனுடைய வீடு பொன்னகரத்தின் நெருக்கமான சந்து ஒன்றில் இருந்தது. முருகானந்தத்தின் குடும்பத்தில் அத்தனை பேரும் உழைப்பாளிகள். தாயார், தகப்பனார், சகோதரி மூவருக்கும் மில்லில் வேலை. அவன்தான் அந்த வழியிலிருந்து சிறிது விலகித் தையல் கடை வைத்திருந்தான். உள்ளங்கை அகலத்துக்கு ஒர் இடத்தில் ஒரே தையல் இயந்திரத்தோடு அந்தக் கடையைத் தொடங்கினான் அவன் தொடக்கத்தில் அளவு எடுப்பதிலிருந்து பித்தான்களுக்குத் துளை போடுவதுவரை எல்லா வேலைகளையும் ஒரே ஆளாக இருந்து கொண்டு செய்தவன், திறமையாலும் சுறுசுறுப்பாலும் படிப்படியாக வளர்ந்து இன்று தன்னோடு இரண்டு தையற்காரர்களை உடன் வைத்துக்கொண்டு வேலை வாங்குகிற அளவு முன்னேறி இருந்தான். ஒவ்வோர் ஊரிலும் குறிப்பிட்ட தொழிலில் பலர் இருந்தாலும் சிலருக்குத் தான் அந்தத் தொழிலில் பேரும் புகழும் வந்து பொருந்தும். மதுரையில் அத்தகைய பேரும் புகழும் பொருந்திய சில தையற்காரர்களில் முருகானந்தம் முதன்மை பெற்றிருந்தான்.

அரவிந்தனின் நட்பும், பழக்கமும், முருகானந்தத்துக்குத் தமிழ்ப் பற்றும் அறிவு உணர்ச்சியும் அளித்திருந்தன. ஆவேசம் நிறைந்த மேடைப் பேச்சாளனாகவும் அவன் உருவாகியிருந்தான். பொன்னகரம், பிட்டுத்தோப்பு, ஆரப்பாளையம், மணிநகரம் ஆகிய பகுதிகள் மதுரை நகரத்தின் உழைக்கும் மக்கள் பெரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/171&oldid=555894" இலிருந்து மீள்விக்கப்பட்டது