பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 259

இருந்தாற் போலிருந்து துள்ளித் திரியும் புள்ளிமான் குட்டியாக மாறி விட்டாளே என்று வியந்தாள் பூரணி. கார் காலத்து முல்லைப் பூப்போல் ஒரு பெண்ணின் முகத்திலும், விழியிலும், நடையிலும் இத்தனை புது வனப்புப் பொலிய வேண்டுமானால் அதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும். பூரணி அந்தக் காரணத்தை அறிந்து கொள்ள ஆசைப்பட்டாள். ஆனால் படித்த பெண்ணிடம் நேரடியாக அதைப்பற்றிக் கேட்பது அநாகரிகமாக முடிந்து விடுமே என்றும் தயங்கினாள். எனவே அந்தக் கடிதம் யாரிடமிருந்து வசந்தாவுக்கு வந்தது? அதில் அவளுடைய மகிழ்ச்சிக்குக் காரணமாக என்ன இருக்கிறது? என்பன போன்ற ஐயங்களை வாய்விட்டுக் கேட்காமல் தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டாள்.

'படகில் சுற்ற வேண்டுமென்றாய்! சுற்றியாயிற்று. இப்போ தென்னடா என்றால் குதிரையேறிச் சுற்றவேண்டுமென்கிறாய்? மறுபடியும் கேட்கிறேனே என்று தப்பாக நினைத்துக்கொள்ளாதே வசந்தா. இன்று நீ மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறாய். உன் மகிழ்ச்சியின் காரணத்தை நானும் அறிந்து கொள்ளலாமா?" என்று மெதுவாக அவளிடம் கேட்டாள் பூரணி.

வசந்தாவின் முகம் அழகாகச் சிவந்தது. இதழ்களில் நகை சுரந்து நின்றது. "போங்கள் அக்கா, எதையேர் சொன்னால் வேறு எதையோ கேட்கிறீர்கள் நீங்கள். நான் குதிரையில் ஏறிச் சுற்றப்போகிறேன்" என்று பூரணிக்குப் பதில் சொல்லிவிட்டுக் குதிரைக்காரனைக் கைதட்டிக் கூப்பிட்டாள் வசந்தா.

"அழகுதான் போ குதிரையேறிச் சுற்றுவதற்கு நீயும் நானும் பச்சைக் குழந்தையா என்ன?"

"நீங்களும், நானும் மட்டுமில்லை அக்கா? இந்த மலைக்கு வந்து விட்டால், எத்தனை வயதானாலும் பச்சைக் குழந்தையின் உற்சாகம் வந்து விடும். அதோ அங்கே பாருங்கள்'

வசந்தா சுட்டிக் காட்டிய திசையில் பூரணி பார்த்தாள். ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியும், அவள் கணவர் போல் தோன்றிய வெள்ளைக்காரரும் செழிப்பாக உடற் கட்டுள்ள செவலைக் குதிரைகளில் கம்பீரமாகச் சென்று கொண்டிருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/261&oldid=555984" இலிருந்து மீள்விக்கப்பட்டது