பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 275

மாலையில் ஐந்து மணிக்கு மேலும் ஒட்டல்களில் டேபிள் கிளினர் வேலையோ, சப்ளையர் வேலையோ எது கிடைத்தாலும் பார்த்தான். மதுரை இரயில்நிலையத்துக்கு அருகில் அந்த நாளில் "பீமவிலாசம்' என்ற பெரிய ஒட்டல் இருந்தது, அதன் முதலாளி தங்கமான மனிதர். அவர் தம் ஒட்டலில் வேலைபார்த்துக் கொண்டே பள்ளிக்கூடத்தில் படிக்கவும் அவனை அனுமதித்தார். ஒட்டலுக்கு அருகில் இரயில் நிலையத்தில் மேற்குப் புறத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆறாவது வகுப்பில் சேர்ந்தான் அரவிந்தன். அவனோடு படிக்கிற மாணவர்கள் ஐந்து மணிக்கு மேல் அதே ஒட்டலுக்குச் சிற்றுண்டி உண்ண வருவார்கள். அழுக்குத் துணியும் கையுமாக மேசை துடைக்க நின்று கொண்டிருக்கும் அவனைக் கண்டு கேலி செய்வார்கள். பரிகாசம் பண்ணுவார்கள். வகுப்பிலே அவனுக்கு டேபிள் கிளீனர் என்ற பட்டப் பெயர். பல்லைக் கடித்துக் கொண்டு இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டான் அரவிந்தன். சில நாட்களில் உடைமாற்றிக்கொள்ள நேரமிருக்காது. ஒட்டலில் வேலை செய்த அழுக்குகள் படிந்த உடையோடு பள்ளிக்கூடத்துக்கு ஓடுவான். சில ஆசிரியர்கள் அவனுடைய தோற்றத்தைப் பார்த்து ஏளனமாக நகைப்பார்கள். பையன்கள், 'டேய் டேபிள் கிளீனர், முதலில் உன்னைக் கிளின் பண்ணிக்கோடா' என விசில் அடித்துக் கேலி பேசுவார்கள்.

பதின்மூன்று வயதிலிருந்து இருபதாவது வயது வரை உள்ள காலம் அவனுடைய வாழ்க்கையைக் கடுமையான உழைப்பினால் மலர்வித்த காலம். கேவலமோ ஏளனமோ பாராமல் அவன் உழைத்துத் தன்னை வளர்த்துக் கொண்ட காலம் அது. தெருத் தெருவாகத் தினசரிப் பேப்பர்களைக் கூவி விற்று அதில் கிடைக்கும் கமிஷனைப் பள்ளிச் சம்பளமாகக் கட்டியிருக் கிறான். அச்சாபீஸில் தாள் மடித்திருக்கிறான். வேறு ஒரு வேலையும் கிடைக்காத இரண்டொரு சமயங்கள் மூட்டை தூக்கிக் கிடைக்கிற கூலியைக்கொண்டு பள்ளிக்கூடப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறான். அவனுடைய வயதில் அப்படி அவனைப் போல் உழைத்து முன்னுக்கு வருவது என்பது எல்லோருக் கும் முடியாத காரியம். அவன் பிடிவாதமாக முன்னுக்கு வந்தவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/277&oldid=556000" இலிருந்து மீள்விக்கப்பட்டது