பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 குறிஞ்சிமலர் வரன்கள் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒன்றும் சரியாக அமையவில்லை. உங்களுக்கு ஒன்றும் அவசரமான காரியமில்லா விட்டால் கொஞ்சம் வீட்டுக்கு வாருங்களேன். இராத்திரிச் சாப்பாட்டை அங்கே வைத்துக் கொள்ளலாம். எனக்கும் உங்களிடம் சிறிது நேரம் மனம் விட்டுப் பேச வேண்டும் போலிருக்கிறது' என்று மங்களேசுவரி அம்மாள் வேண்டிக் கொண்டபோது, அரவிந்தனால் மறுக்க முடியவில்லை.

'நான் இரவில் சாப்பிடுவதில்லை, சிற்றுண்டிதான். காலையில் நீங்களும் வருவதானால் நாம் எல்லோரும் சேர்ந்தே கோடைக்கானலுக்குப் போகலாம்' என்று அந்த அம்மாளோடு காரில் செல்லும் போது அரவிந்தன் சொன்னான். "பூரணியை இலங்கைக்கும் மலேயாவுக்கும் சொற்பொழிவுகளுக்கு அழைத் துக் கடிதங்கள் வந்திருக்கின்றனவாம். அவள் அதைப்பற்றி இன்னும் முடிவு சொல்லவில்லையாம். மங்கையர் கழகத்தி லிருந்து அவளைச் சம்மதிக்கச் செய்ய வேண்டும் என்று என்னிடம் வந்து நச்சரிக்கிறார்கள். அதற்காக நான் கோடைக் கானல் போக வேண்டியிருக்கிறது' என்று மங்களேசுவரி அம்மாள் கூறிய செய்தி அரவிந்தனுக்குப் புதியதாயிருந்தது. பூரணியின் வாழ்க்கையில் எந்தப் புகழ் ஒளி பரவ வேண்டுமென்று அவன் கனவுகள் கண்டுகொண்டிருந்தானோ அது பரவுகிற காலம் அருகில் நெருங்கி வருவதை அவன் இப்போது உணர்ந்து பூரித்தான். - மதுரை நகரத்து வீதிகளின் வழியெல்லாம் ஒளி வெள்ளம் இறைந்து கிடந்தது. கார் அவற்றிடையே புகுந்து விரைந்து கொண்டிருந்தது. நகரத்துக்குப் பல்லாயிரம் வாய்கள் முளைத்துத் தாறுமாறாகக் குரலெழுப்பிப் பாடிக்கொண்டிருப்பதுபோல் ஒலிபெருக்கிகளும், சினிமா வசன இசைத் தட்டுக்களும் மூலைக்கு மூலை ஒலித்துக் கொண்டிருந்தன. ஒன்றரை நாள் இந்த நகரத்துச் சந்தடிகளிலிருந்து விலகி இராமநாதபுரம் சீமையின் வறண்ட கிராமம் ஒன்றில் இருந்துவிட்டு வந்த அரவிந்தனுக்கு இப்போது நகரமே சிறிது புதிதாய்ப் பெரியதாய் மாறியிருப்பது போல் பிரமை தட்டியது. வெளியூர் சென்று விட்டு மதுரை திரும்பும் போதெல்லாம் இந்த உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/312&oldid=556035" இலிருந்து மீள்விக்கப்பட்டது