பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 311 தானப்ப முதலித் தெருவில் மங்களேசுவரி அம்மாள் வீட்டு வாயிலில் கார் நின்றதும் அரவிந்தன் இறங்கினான்.

'உள்ளே வாங்க அரவிந்தமாமா' என்று மங்கையர்க்கரசி

அவனைத் தன் பூங்கையால் பிடித்து இழுத்தாள். இந்தச் சிறுமியிடம் அரவிந்தனுக்குத் தனிப்பட்ட பிரியம் உண்டு. பூரணியின் தங்கை என்பதற்காகவோ, பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் கடைசிப் பெண் குழந்தை என்பதற்காகவோ மட்டும் ஏற்பட்ட பிரியமில்லை அது. உயிர் பெற்று நிற்கும் தங்கக் குத்து விளக்குப் போல் முகமும், கண்களும், சிரிப்பும், கைகளும், கால்களும் எல்லாம் பூக்களாலேயே படைத்துப் பூக்களின் மணமூட்டினாற் போல மாயக் கவர்ச்சி வாய்ந்த சிறுமி இவள். எந்நேரமும் மருட்சியும் வியப்பும் கலந்து கனிந்து, கவிந்து, வெள்ளை அல்லி இதழில் கருப்புத் திராட்சை உருள்வது போல் இந்தச் சிறுமியின் கண்களுக்கு ஒர் அழகு வாய்த்திருந்தது. பெண் குழந்தைகளின் கண்களிலிருந்து இந்த மருட்சியும் வியப்பும் மாறிக் கள்ளத்தனம் குடிகொள்கிற வயது வந்தாலும் மங்கையர்க்கரசிக்கு இந்த அழகு மாறாததுபோல் அவ்வளவு நிறைவாகவும், பதிவாகவும் இருந்தது. 'குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் என்று குழந்தைமை அழகைப் பற்றி வர்ணித்திருக்கிறார்களே, அந்த அழகுக் குறுகுறுப்பு, சிறுமியான பின்பும் இந்தப் பெண்ணிடமிருந்து போகவில்லை.அதுதான் அரவிந்தனைக் கவர்ந்தது. பூரணியின் விழிகளிலும் இந்த அழகு உண்டு. ஆனால் அது அறிவொளி கலந்த அழகாயிருந்தது.

வெகு நாட்களாகவே சந்திக்க வாய்ப்பின்றிப் பிரிந்து விட்ட சொந்தத் தம்பியை அன்போடு உபசாரம் செய்வது போல் அரவிந்தனுக்கு உபசாரம் செய்தாள் மங்களேசுவரி அம்மாள். செல்வச் செழிப்புக்குரிய ஆணவமே சிறிதும் இல்லாமல் இந்த அம்மாள் எப்படி இவ்வளவு அன்பு மயமாக நெகிழ்ந்துவிட முடிகிறதென்று அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. பழகுகின்றவர்களோடு ஒட்டிக் கொள்ளும்படி செய்துவிடுவதன் காரணமாக அன்புக்குத் தமிழில் பசை என்று ஒரு பெயர் உண்டு. மனிதர்களுடைய மனங்களை இணைத்துத் தொடுத்து விடுகிற சக்தி அன்புக்கு இருப்பதால் நார் என்றும் அன்புக்கு ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/313&oldid=556036" இலிருந்து மீள்விக்கப்பட்டது