பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 327

"அந்த அம்மாளின் முற்போக்கு மனப்பான்மையில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் ஏற்றத்தாழ்வை எண்ணித்தான் நானும் சந்தேகப்பட்டுக்கொண்டிருந்தேன். அது இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். முடிந்தால் இன்றைக்கு இரவே அந்த அம்மாளிடம் பேசி முடிவு செய்துவிடலாம். நாம் இருவரும் சொன்னால் கேட்டுக் கொள்வார்கள்' என்றாள் பூரணி.

'முடிவெல்லாம் ஏற்கனவே செய்த மாதிரிதான். மாப்பிள்ளை முருகானந்தம்தான் என்கிற ஒர் இரகசியத்தை மட்டும் இன்னும் நான் வெளியிடவில்லை' என்று சிரித்துக் கொண்டே சொன்னான் அரவிந்தன். மலையில் மெல்ல இருள் சூழ்ந்து சிலேட்டுப் பலகை நிறத்துக்கு மங்கத் தொடங்கியது. வெண்மை நுரைத்துப் பொங்கினாற் போல் மஞ்சு சூழ்ந்தது. அரவிந்தனும், பூரணியும் குறிஞ்சியாண்டவர் மலைப்பகுதியிலிருந்து எழுந்து நடக்கலா யினர். மலைப்பகுதிகளில் எல்லாப் பசுமையும் கலந்து மணக்கும் ஒருவித மணமும் குளிரும் கலந்த அந்தச் சூழ்நிலையில் அவர்கள் இரண்டு பேரும் தனியாக நடந்து கொண்டிருந்தார்கள். அரவிந்தனோடு வீட்டுக்குத் திரும்பி நடந்து கொண்டிருந்த போது பூரணி தன் உள்ளத்தில் சில ஏக்கங்களைச் சுமந்து கொண்டிருந்தாள். - -

இவரைக் காண வேண்டும் என்று நேற்றும் அதற்கு முன் தினங்களிலும் எவ்வளவு ஏங்கிக் கொண்டிருந்தேன். எவ்வளவு தாகமும் தாபமும் கொண்டிருந்தேன். பார்த்த பின்பும் அவற்றை வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். படிப்பும், அறிவும், மனம் கலந்து அன்பு செலுத்துவதற்குப் பெரிய தடைகளா இவரிடம் என் அன்பையெல்லாம் கொட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவள் ஏதேதோ அறிவுரை கூறுவதுபோல் பேசிவிட்டேன் எனக்கு எத்தனையோ அசட்டு இலட்சியக் கனவுகள் சிறு வயதிலிருந்து உண்டாகின்றன. அதை இவரிடம் சொல்லி இவருடைய மனம் தாழ்வு உணர்ச்சி கொள்ளும்படி செய்து விட்டேனே? இவர் என்னைப்பற்றி இன்று என்னென்ன நினைத்திருப்பாரோ? என்னைப்பற்றி அழகு அழகாகக் கவிதை எழுதினாரே? அதைப் புகழ்ந்து நான்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/329&oldid=556052" இலிருந்து மீள்விக்கப்பட்டது