பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 - குறிஞ்சிமலர்

தொழிற்போட்டிகளையும், பொறாமை, பகைகளையும் கூடியவரை நியாயமாகவும், கண்ணியமாகவும் தீர்க்கமுயன்றான் அரவிந்தன். அனாவசியச் சண்டைகளை முன்கூட்டியே தவிர்த் தான். தான் கிராமத்தில் நிலம் விற்றுக் கொணர்ந்த பணத்தில் அச்சகத்துக் கடன்களை அடைத்தவை போக எஞ்சிய பகுதியைத் தேர்தல் செலவுக்கென ஒதுக்கி வைத்தான். தன்னுடைய திறமையான நிர்வாகத்தினாலும் நாணயமான நடவடிக்கை களாலும் மீனாட்சி அச்சகத்துக்கு வந்து கொண்டிருந்த எந்த வேலைகளும் குறையாமல் பார்த்துக் கொண்டான் அரவிந்தன். பக்கத்தில் புதிதாக ஏற்பட்டிருந்த அச்சகம் அவனையோ, அவனுடைய தொழிலையோ எந்த வகையிலும் கெடுத்துவிட முடியவில்லை. கெடுக்க முடியாவிட்டாலும் கெடுப்பதற்காக முயற்சிகள் பலவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் அரவிந்தனுக்கு எதிராக அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். எந்நேரமும் அவர்களை நினைத்துக் கவலைப்படவோ, போட்டி போடவோ அரவிந்தன் தயாராயில்லை. தனது விலைமதிப்பற்ற நேரத்தைப் பல நல்ல காரியங்களுக்குச் செலவிட வேண்டி யிருந்தது அவனுக்கு. வசந்தா - முருகானந்தம் திருமணம் நிச்சயமாகி முகூர்த்த நாளும் பார்த்து விட்டார்கள். இரண்டு குடும்பங்களுக்கும் பொது மனிதனாக இருந்து அவன்தான் திருமண ஏற்பாடுகளையெல்லாம் செய்ய வேண்டியிருந்தது. மீனாட்சி சுந்தரத்தின் இறுதிச் சடங்குகளுக்காக வந்தபின் பூரணியோ, மற்றவர்களோ திரும்பவும் கோடைக்கானலுக்குப் போகவே இல்லை. பதினைந்து இருபது நாட்கள், திருப்பரங் குன்றத்து வீட்டில் ஓய்வாக இருந்தாள் பூரணி. ஒதுவார்க் கிழவர் வீட்டுக் காமுவுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. போய்ப் பார்த்துவிட்டு வந்தாள். கமலா பிள்ளைத்தாச்சியாகப் பிறந்த வீட்டுக்கு வந்திருந்தாள். சில நாட்களில் மாலையில் அவளுடைய வீட்டுக்குப் போய்ப் பேசிக் கொண்டிருந்து விட்டு வந்தாள். மங்களேசுவரி அம்மாளின் பெண்ணுக்குத் திருமணம் நெருங்கிய போது மதுரையிலேயே அந்த அம்மாளோடு வந்து தங்கி உதவி யாக இருக்கலானாள். நகைக்கடை, புடவைக் கடை என்று மங்களேசுவரி அம்மாளோடு அலைய வேண்டிய இடங்களுக்கு எல்லாம் அலைந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/368&oldid=556091" இலிருந்து மீள்விக்கப்பட்டது