பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

"ஓடுகின்றனன் கதிரவன் அவன்பின் ஒடுகின்றன. ஒவ்வொரு நாளாய் வீடுகின்றன என்செய்வோம் இனி அவ் வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே"

- நற்றிணை விளக்கம்

துன்பங்களையும் தொல்லைகளையும் சந்திக்கும் போதெல் லாம், பூரணியின் உள்ளத்தில் ஆற்றல் வாய்ந்த தெளிவான குரல் ஒன்று ஒலித்தது. "தோற்று விடாதே? வாழ்க்கையை வென்று வாகை சூடப் பிறந்தவள் நீ துன்பங்கள் உன் சக்தியை அதிகமாக்கப் போகின்றன. மனிதர்களின் சிறுமைகளையும், தொல்லைகளையும் பார்த்துப் பார்த்து உன் ஞானக் கண்கள் மலரப் போகின்றன - குப்பைகளையும் இழிவும் தாழ்வுமான நாற்றக் கழிவுப் பொருள்களையும் உரமாக எடுத்துக் கொண்டு மணமிக்க பூவாகப் பூத்து தெய்வச் சிலையின் தோளில் மாலை யாக விழும் உயர்ந்த பூச்செடி போல் ஏழைமையும் துன்பமும்உனக்கு உரம் கொடுத்து உன்னை மணம் கமழ வைக்கப் போகின்றன. நீ வாழ்க்கை வெள்ளத்தோடு இழுபட்டுக் கொண்டு போகும் கோடி கோடிப் பெண்களில் ஒருத்தி அல்லள். பெண்ணில் ஒரு தனி வாழ்க்கை நீ; வாழ்க்கையில் ஒரு தனிப் பெண் நீ. வாழ்க்கை வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடப் போகிறவள் நீ.

துன்பங்களை மிக அருகில் சந்திக்கும் போதெல்லாம் பூரணியின் இதயத்தில் இந்தக் குரல் ஒலித்தது. இது யாருடைய குரல் ? எதற்காக ஒலிக்கிற குரல் என்பதை யாரால் அறிய முடியும்? விட்ட குறை தொட்ட குறை என்பது போல் ஆன்மாவோடு ஒட்டி வந்த தொனி அது. வாழ்க்கை மலர மலர அதுவும் மலரலாமோ என்னவோ? மருக்கொழுந்துச் செடியும், துளசிச் செடியும் எப்படி மணக்கும் என்பதை அவை வளர்ந்து பெரிதான பின்பு கண்டுபிடிக்கலாமென்று காத்திருக்க வேண்டாமே! முளைத்து வேர்விடும் போதிலேயே தத்தமக்குரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/41&oldid=555765" இலிருந்து மீள்விக்கப்பட்டது