பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/468

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 குறிஞ்சிமலர்

பின்னும் சிறிது நேரம் கழித்துப் பக்கத்து அறையிலிருந்து மீண்டும் அவள் வெளியே வந்தபோது நெற்றியில் திலகம் இல்லை, கைகளில் வளையல்கள் இல்லை. செவிகள், மூக்கு, கழுத்து எங்கும் அங்கிருந்த அணிகலன்கள் கழன்று மூளியாகி யிருந்தன. அலைகளடங்கிய பெண் கடல்போல மெல்ல வந்து முருகானந்தத்தை நோக்கி 'மேலே நடக்க வேண்டியதைச் செய்யுங்கள்' என்று நிதானமாகச் சொன்னாள் பூரணி. அவள் முகத்தில் உலகமெல்லாம் தேடினும் கிடைக்காத சாந்தி நிலவிற்று அப்போது.

நடக்க வேண்டியவைகள் நடந்தன. தேர்தல் வெற்றியைக் கொண்டாட வந்த ஊர்வலம், சோக ஊர்வலமாக மயானம் வரை தொடர்ந்தது. அந்த நள்ளிரவின் அமைதியில் முழுநிலா வானத்தின் கீழே வையையின் வடகரையிலே அரவிந்தன் என்னும் பேரெழில் வாழ்க்கை மண்ணில் கலந்து பொய்யாய்ப் போய் விட்டது. நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறுமுறுவல் பதித்த முகத்துக்குத் திலகம் இல்லாமல் துடைத்துப் போய் விட்டான் அரவிந்தன். தரளம் மிடைந்து ஒளிதவழக் குடைந்து இருபவழமும் பதித்த இதழ்களில் சிரிப்பில்லாம்ல் செய்து விட்டுப் போய் விட்டான். உயரத்தில் ஏறிச் செல்லும் போதெல்லாம் உடன் வரும் துணையைப் பூரணி இழந்து விட்டாள்.

அன்றிரவு எல்லோரும் வீடு திரும்பும் போது இரண்டு மணிக்கு மேலிருக்கும். அரவிந்தன் இருந்த அறையில் அவனுடைய குறிப்பு நோட்டுப் புத்தகங்களும், அவற்றின் மேல் அவள் இலங்கையிலிருந்து வாங்கி வந்து அவனுக்கு அன்பளிப்பாகத் தந்த கைக்கடிகாரமும் இருந்தன. அந்த கடிகாரத்தை அவனுடைய கையில் கட்டும்போது காலத்தை உங்கள் கையில் கட்டி ஒட விடுகிறேன்! என்று அவள் கூறியதற்கு 'நாம் மனிதர்கள், காலத்தின் கையில் கட்டுண்டு ஒடுபவர்கள் என்று அரவிந்தன் புன்னகையோடு கூறிய பதிலை நினைத்தாள் பூரணி. குறிப்பு நோட்டுப் புத்தகத்தில் தன்னைக் குறிஞ்சிப்பூவாக உருவகம் செய்து அவன் எழுதியிருந்த வாக்கியங்களைப் படித்தபோது புனிதமானதொரு உணர்வை அடைந்தாள் அவள் அன்றிலிருந்து அவள் மனமே நினைவுகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/468&oldid=556191" இலிருந்து மீள்விக்கப்பட்டது