பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 குறிஞ்சிமலர்

'அடி அசடே இதற்கெல்லாமா அழுவார்கள்? பேசாமல் அந்தச் சங்கிலித் துணுக்குகளை இப்படிக் கொடு. எங்கள் தெருவில் ஒரு பத்தர், பொற் பட்டறை வைத்திருக்கிறார். நாளைக்கு சாயங்காலத்துக்குள் சரிப்படுத்திக் கொண்டு வந்து தந்து விடுகிறேன். அது வரையில் உன் அம்மாவுக்குத் தெரிய விடாமல் பார்த்துக் கொள். நடந்ததைப் பற்றி யாரிடமும் மூச்சு விடக் கூடாது' என்று அந்த சங்கலித் துணுக்குகளை வாங்கிக் கொண்டாள் பூரணி.

'சங்கிலி போயிருந்தாலும் பரவாயில்லை பூரணி. அதற்காக உன் கைகளை இப்படி இரணமாக்கிக் கொண்டு வந்திருக்க வேண்டாம்!'

'கைகளில் இரணம் படாமல்தான் எதையும் செய்து விட ஆசைப் படுகிறோம், ஆனால் கைகளிலும் மனத்திலும் எண்ணங்களிலும் படுகிற புண்களைச் சுமக்காமல் வாழ முடிவ தில்லை."

இந்த வார்த்தைகளைச் சொல்லி விட்டு வயதுக்கு அதிகமான முதுமையை வரவழைத்துக் கொண்டாற் போலச் சிரித்தாள் பூரணி. அப்படிச் சிரிப்பதற்கு அவளால் தான் முடியும்.

கமலாவை வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு பூரணி சந்நிதித் தெருவில் திரும்பி நடந்த போது ஏறக்குறையத் தெரு அடங்கிப் போயிருந்தது. நெடுநேரம் கதவைத் தட்டியபின் திருநாவுக்கரசு விழித்தெழுந்து வந்து கதவைத் திறந்தான். கதவைத் தாழிட்டுக் கொண்டு உள்ளே போய் அப்பாவின் படிப் பறையில் விளக்கைப் போட்டாள். காலையில் நினைவாகப் பத்தரிடம் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் சங்கிலித் துண்டுகளை ஒரு காகிதத்தில் சுற்றி மேஜை மேல் வைத்தாள். சிறிது நேரம் எதையாவது படித்து விட்டு உறங்கப் போகலாம் என்று அப்பாவின் புத்தகத்தை உருவினாள். - கவியரசர் பாரதியாரின் பாடல் தொகுதி அது. தானாகப் பிரிந்த பக்கத்தில் மேலாகத் தெரிந்த அந்தப் பாட்டு பூரணியின் அப்போதைய மனநிலைக்கு இதமாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/56&oldid=555780" இலிருந்து மீள்விக்கப்பட்டது