பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 61

வழக்கம் போல் அனுதாபக் கடிதங்கள் தான். அந்த மாபெரும் தமிழறிஞருக்கு திருப்பரங்குன்றத்திலேயே ஒரு நினைவு மண்டபம் எழுப்பியாக வேண்டும் என்று ஆவேசத்தோடு வரிந்து எழுதியிருந்தார் உணர்ச்சி மிக்க இளைஞர் ஒருவர். பூரணி தனக்குள் நகைத்துக் கொண்டாள்.

'நினைவு மண்டபமாம்; நினைவு மண்டபம் மனிதனை மறந்து விட்டு மண்டபத்தைக் கட்டி நினைவு வைத்துக் கொள்ளப் பார்க்கிறார்களே! அந்த மண்டபத்துக்குத் தோண்டுகிற அஸ்திவாரத்தில் எங்களையும் தள்ளிவிட்டால் கவலை தீர்ந்தது! இன்னும் நெடுங்காலம் வாழ்ந்து பசியோடும் பண்புகளோடும் போராட வேண்டியிராது' என்று வெறுப்போடு வாய்க்குள் மெல்ல இப்படிச் சொல்லிக் கொண்டாள்.

சிறுகுடலைப் பெருங்குடல் விழுங்குவது போல் பசி வயிற்றைக் கிள்ளியது. குளித்து விட்டால் சோர்வு குறையுமென்று குளிக்கப் போனாள். -

கிண்ணற்றில் நீர் இறைக்கும் கயிறு பாதியில் நைந்திருந்தது. எப்போது அறுந்து விழுமோ? எதற்கென்று தனியாகக் கவலைப்படுவது? வாழ்க்கையே அப்படிப் பாதியில் நைந்த கயிறு போல் தான் இருக்கிறது.

பானையில் அரிசி இல்லை; பரணியில் விறகு இல்லை. கையில் இரண்டரை அனாவுக்கு மேல் காசு இல்லை. அவற்றை பிறரிடம் சொல்லிக் கடன் கேட்க விருப்பமும் இல்லை. பூரணி அழுது கொண்டே குளித்தாள். குளிக்கும்போது அழுதால் யாரும் கண்டு கொள்ள முடியாதல்லவா? அழுகையும் ஒரு குளிப்பு தானே? துக்கத்தில் குளிப்பது தானே அழுகை நீரில் குளித்துக் கொண்டே துக்கத்திலும் குளித்தாள் அவள். அநாதையாக விட்டுப் போன அம்மாவின் இலட்சுமிகரமான முகத்தை மனக் கண் களுக்கு முன் நினைவுக்குக் கொணர முயன்றாள். அப்பாவின் முகமோ முயற்சியில்லாமல் நினைவில் வந்தது. குடம் குடமாகத் தண்ணீரை ஊற்றியும் உடம்பு குளிர்ந்ததே யொழிய நெஞ்சின் சூடு தணியவில்லை.

அம்மாவின் முகம் நினைவில் சிக்கிய போது நெஞ்சில் கனல் பிழம்பு போல் ஒரு சுடர் எழுந்தது. மீனாட்சியம்மனின் முகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/63&oldid=555787" இலிருந்து மீள்விக்கப்பட்டது