பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 குறிஞ்சி மலர்

'பத்துப் பாரம் முடித்தாகி விட்டது.'

'பத்தா சரி. சுருக்கப் பார்த்து விரைவாக முடி. எதற்குச் சொல்கிறேன் என்றால், நானே சொந்தத்திலே பெரிதாக ஒரு வெளியீட்டு வேலை எடுத்துக்கொள்ள நினைத்திருக்கிறேன். அது சம்பந்தமாக நீ கூட இன்று ஓர் இடத்துக்குப் போய் வர வேண்டும். இந்த நாவலை முடித்துக் கொண்டால் வேறு அதிக வேலையின்றி என் திட்டத்திற்கு ஏற்ற மாதிரி ஒய்வாக இருக்கும்.' - -

"ஓ! அதற்கென்ன சார்; இதை இன்னும் இரண்டே நாட்களில் முடித்து விடுகிறோம்.'

பெரியவர் கோபம் தணிந்து அரவிந்தனிடம் நிதான நிலைக்கு வந்திருக்கிறார் என்பதை அவர் பேச்சுக் காட்டியது. எப்போதுமே அவர் இப்படித்தான் காரணமின்றி இரைவார். உடனே தோளில் கைவைத்துப் பேசவும் ஆரம்பித்து விடுவார். சீக்கிரமே கோபம் மறந்துபோகும் அவருக்கு. சில சமயத்தில் உரிமையோடு அளவுக்கு மீறி இரைந்து பேசிக் கடிந்து கொண்டாலும் அரவிந்தன் மேல் அவருக்குத் தனி அபிமானமும் பாசமும் உண்டு. அரவிந்தனுக்கு வீடு வாசல் எல்லாம் அதுதான். இரவு பகல் பாராமல் உழைத்துவிட்டு அங்கேயே நாலு நியூஸ் பிரிண்ட் காகிதத்தை விரித்து அதிலேயே படுத்து உறங்கி விடுகிறவன்

அவன. -

'மீனாட்சி அச்சகம்’ என்ற நகரத்தின் புகழ்பெற்ற அச்சகத்துக்கு மானேஜர், புரூப் ரீடர், கணக்கு எழுதுபவர் எல்லாம் அரவிந்தன் தான். சமயங்களில் பில் கலெக்டர் கூட அவன்தான். எந்த வேலையை எப்போது எப்படிச் செய்ய வேண்டும் என்று அரவிந்தனுக்கு அத்துபடி. அவனுக்கு நல்ல முகராசி உண்டு. விநயமும் அதிகம். சுறு சுறுப்பு ஒரு நல்ல மூலதனம். அரவிந்தனிடம் அது குறைவின்றியிருந்தது. அவனால் எதையும் செய்யாமல் ஒரு வினாடி கூட இருக்க முடியாது. ஒவ்வொரு வினாடியும் எதையாவது செய்து கொண்டிருக்க வேண்டும் அவனுக்கு அப்படி ஒரு கூர்மை. அப்படி ஒரு துறுதுறுப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/84&oldid=555808" இலிருந்து மீள்விக்கப்பட்டது