பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7

குறிஞ்சி நிலமாகிய திருப்பரங்குன்றத்தில் தொடங்கிய கதையைக் குறிஞ்சி நிலமாகிய கோடைக்கானலில் முடித்தேன். கதை நிகழ்ச்சியில் முதல் முறை குறிஞ்சி மலர்ந்த போது என் கதைத் தலைவியும் மனம் மலர்ந்து அரவிந்தனைக் கண்டு, பேசி நிற்கிறாள்; கதை முடிவில் இரண்டாம் முறை குறிஞ்சி மலரும் போது என் கதைத் தலைவி பூரணியின் கண்களில் சோக நீரரும்பித் துயரோடு நிற்கிறாள். இந்தக் கதையில் குறிஞ்சிமலர் போல் அரிதின் மலர்ந்த பெண் அவள்; குறிஞ்சியைப் போல் உயர்ந்த இடத்தில் பூத்தவள் அவள். அவளுக்கு அழிவே இல்லை. நித்திய வாழ்வு வாழ்பவள் அவள்.

அரவிந்தனைப் போல் எளிமை விரும்பும் பண்பும், தூய தொண்டுள்ளமும் ஒவ்வொரு தமிழ் இளைஞனுக்கும் இருக்க வேண்டுமென்பது மணிவண்ணனின் அவா. பூரணியைப் போல் குறிஞ்சிமலராகப் பூக்கும் பெரும் பெண்கள் பலர் தமிழ் நிலத்தே தோன்ற வேண்டும் என்பது மணிவண்ணின் அவா. பூரணியைப் போல் குறிஞ்சிமலராகப் பூக்கும் பெரும் பெண்கள் பலர் தமிழ்நிலத்தே தோன்றவேண்டும் என்பது மணிவண்ணனின் கனவு.

நமது தமிழ்நாட்டின் சான்றான்மைக்கு இருப்பிடமான பேராசிரியர் மு.வ. அவர்கள் எக்காலத்தும் என் உள்ளத்தே பேருருவாக நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் இந்நாவலுக்குச் சிறப்புரை அளித்திருக்கிறார்கள் என்பது அடியேனுக்குப் பெரும் பேறு ஆகும்.

குறிஞ்சி மலர் முடிந்த சில நாட்களில் என் முதன் மகளாய் வந்து பிறந்து எனது இல்லத்தில் ஒளி பரப்பி நான் கனவில் கண்ட பூரணியாக நிகழ்வில் தோன்றும் என் செல்விக்கு இந்த நாவலை நூல் வடிவில் படைக்கிறேன்.

இந்த நூலை வெளியிடும் தமிழ்ப் புத்தகாலயத்துக்கு என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பன்,
நா. பார்த்தசாரதி
(மணிவண்ணன்)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/9&oldid=1232691" இலிருந்து மீள்விக்கப்பட்டது