இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குறும்பா
29
குடும்பத்திலும், கொள்கையிலும் சண்டை
குப்பத்திலே உடைந்தனவாம் மண்டை
நடுத்தெருவில் மன்றுகளில்
நல்ல தொழிற் சாலைகளில்
தொடுக்கும் சண்டை வைத்தாள்மது முண்டை!
◯
எதிரிதன்னை வெல்வான் என்று அஞ்சி
இடுப்பொடிந்தான், மனம் ஒடிந்தான் செஞ்சி!
புதர் அசைந்தால் 'புலி புலி, ஆ
போந்தது' என்று கிலி பிடித்தான்
முதுகிலாத முதலமைச்சன் கெஞ்சி!
◯
செருக்கினாலே குடும்பத்தினை மறந்தான்
செம்மைதரு கல்வியினைத் துறந்தான்;
அருவருக்கும் அரசியலில்
ஆருக்கென்ன தெரியும் என்றான்
தெரிந்தெடுத்தார் அமைச்சனாகச் சிறந்தான்.
◯
மனத்தினையே விற்றுவிட்டான் சேந்தன்
மாண்புக்கெல்லாம் அடிபிடித்தான் மாந்தன்!
இனத்தைக் காட்டிக் கொடுத்து விட்டான்
இழிவுக் கெல்லாம் பாய் விரித்தான்
இன்று கல்விக் கழகத்துணை வேந்தன்!