பக்கம்:குறும்பா.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறும்பா

55


நல்லவரைக் காணவில்லை நாட்டில்
‘நரிகள் பன்றிகள்' என்றெழுதினேன் ஏட்டில்;
வல்ல தோழன் வாய் திறந்தான்
‘வாழ்ந்தவர்கள் பலரும் சுடு காட்டில்’
சொல் முடியுமுன் யாமிருவர்
துறத்தப்பட்டோம் நல்லார் சிறைக் கூட்டில்!



நல்லிசைப்பண் பாடல்தந்தான் பொன்னி
நாடவில்லை வந்தவர்கள் எண்ணி;
புல்லிசைப்பண் பாடலுற்றாள்
புடவை நெகிழ ஆடலுற்றாள் கன்னி;
வல்லிசையின் பல்லியங்கள்
வாய் பிளந்து காணலுற்றார் உன்னி!



வீரவழி பாட்டினுக்கோர் ஆளை
வேண்டி உலாப் போந்து வந்தார் கோளை;
ஆர அமர எண்ணிடாமல்
அடுத்துவரும் தேர்தலுக்காம் நாளைக்
கூறப்பலர் கொண்டு வந்தார்
குற்றத்திலே தோய்ந்த ஒரு தோளை!


நாட்டுடைகள் அணிந்திருந்த போது
நல்லபடிதான் இருந்தாள்அம் மாது
வீட்டிலிருந்து திரையரங்கம்
மேவி இரு படங்கண்டபின் தீது
காட்டும் இழி நாகரிகக்
காட்சிப்பொருள் ஆனா இப்போது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/58&oldid=1195868" இலிருந்து மீள்விக்கப்பட்டது