பக்கம்:குற்றால வளம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

குற்றால வளம்

 பல பொருள்களுண்டு. குற்றாலம், இவ்வளத்தை இம் மூன்று பொருள்களினும் எடுத்தாள ஏற்றதாக அமைந்துளது. "குற்றாலத்தில் வருவாய் எது? ஆண்டுச் செல்வோர்க் கெல்லாம் செலவு தானே? எனவே அப்பொருள் பொருந்தாது" என்று சிலர் எண்ணலாம். வருவாய் என்பது செல்வப்பொருள் ஒன்றைமட்டுமோ குறிக் கொள்ளும் கேவலம் அவ் ஒன்றையே அது குறித்தல் சிறப்புடைத்தன்று. குற்றாலம் போதருவார் எய்தும் வருவாய் கொஞ்சமோ? உலகில் உயிர்கள் நலம் பெற்று வாழ்தற்கு இன்றியமையாப் பொருள்களாகிய நீரையும் காற்றையும் வேண்டும் அளவு குற்றாலம் கொடுக்கின்றது. இவ்வருவாயைவிட வேறு என்னே வேண்டும்? எனவே இப்பொருள் பொருந்துவதே.

அழகு குற்றாலத்தில் உண்டு என்று கூறவும் வேண்டுமோ? குற்றாலத்தில் காணப்படும் யாவும் அழகுதானே. அழகற்ற ஒன்றை அந்நன் மலையில் காணமுயுமோ? எல்லாம் அழகு! எல்லாம் அழகு என்னே குற்றால மலையின் இயற்கை அழகு! மலைமேல் ஏறிவிட்டால் கட்படுவன யாவும் அழகன்றி வேறென்! அவ்வியற்கை அழகே அழகு! நகரங்களில் எத்துணைக் கோடி பணங்களைச் செலவிட்டுச் செய்யப்படும் செயற்கை அழகும் அவ் இயற்கை அழகிற்கு ஈடாகுமா? மனிதர்க்ளால் ஆக்க முடியாத அழகுகள் பல அம் மலையில் திகழ்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/11&oldid=1290766" இலிருந்து மீள்விக்கப்பட்டது