பக்கம்:குற்றால வளம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

15

 செயல் என்று எண்ணற்க முடியாத தன்மை வாய்ந்த ஒன்று எந் நாளும் முடியாது. செயற்கரிய செயலாவது-செய்யும் இயல்புவாய்ந்ததுதான்; ஆனால் உலகத்தில் பலரால் செய்ய முடியாதது; முயன்றால் முடிவது; அது செய்யும் அறிவைப் பலர் பெறாமையினாலே அது செயற்கரியதாயிற்று: செயற்கரிய செயல் இதுவேயன்றி வேறன்று. செயற்கரிய செயல் என்பதற்கு உயரிய செயல் என்பதே பொருள். அச் செயல் உடையாரே தெய்வத்தன்மையாளர்.


இன்ன நீர்மையுடையது தெய்வத்தன்மை யென்ற மெய்யுணர்வு கைவரப்பெற்றார், "தெய்வத்தன்மையுடையார் அந்நாள் இருந்தார்; இந்நாள் அவரனையார் இலர்" என்ற பொருளற்ற பேச்சுப்பேசார் எல்லாவற்றிற்கும் அற்புதம் அற்புதம் என்று புலம்பும் புலப்பத்திற்கு மக்கள் செவிகொடுத்தல் ஆகாது. அவ் அற்புதமாயை அகன்றாலன்றி மெய்யறிதல் இல்லை. அம்மாயைபடர்ந்த மனமுடையார் 'தெய்வத் தன்மை பொருந்தியவர் இந் நாள் இல்லை' யென்றே இயம்பிக் கொண்டிருப்பர். அவர் கூறும் அற்புதங்கள் என்ற பொய்களைத் தள்ளிவிட்டு அவர் கூறுமாறு அவர் கூறும் தெய்வத்தன்மை யுடையார் காதைகளையும் இன்றிருக்கும் பெரியார்கள் காதைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/24&oldid=1291648" இலிருந்து மீள்விக்கப்பட்டது