பக்கம்:குற்றால வளம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

47



செல்வம் நிலையற்றது; இளமை நிலையற்றது; யாக்கை நிலையற்றது; மனைவி மக்கள் ஆதி யாவும் நிலையற்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. நிலையிலா இவ்வாழ்வை விரும்பி மக்கள் மறஞ் செய்தல் ஆகுமோ? நிலையிலா வாழ்வை உணர்தல் வேண்டும், இத்தகைய நிலையிலா வாழ்வில் மக்கள் செய்ய வேண்டிய கடமை என்ன என்பதை நோக்குதல் வேண்டும். அற்ப வாழ்விற்குள் அநீதியான செயல்களைச் செய்தலாகாது. நல்வாழ்வு பெறுங்காலத்தில் இயன்ற நல்லறங்களை யெல்லாம் விடாது ஆற்றுதல் வேண்டும். வாழ்வுள்ள காலத்தில் உலகிற்கு உதவி செய்தல் எளிது. "குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே உடம்பொ டுயிரிடை நட்பு” என்றவாறு,பெற்ற உடம்புக்கும் உயிருக்கும் உள்ள நட்பு நீங்குதற்குமுன் நல்வினை யாற்றிவிடுதல் வேண்டும். "நாச்செற்று விக்குன்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்" என்ற வள்ளுவர் மறையை மறத்தலாகாது. யாக்கையைப் பெற்றவர், அதனாலய பயனைக் கொள்ளாது விடுதல் அறியாமை. "யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர், தாம் பெற்ற யாக்கையா லாய பயன்கொள்க-யாக்கை, மலையாடு மஞ்சுபோற் றோன்றிமற் றாங்கே, நிலையாது நீத்து விடும்” என்பதற்கேற்ப, உடம்பு விரைவில் நீங்கிவிடுமாதலான் உடம் பெடுத்தவர் உடம்பினால் ஆய பயனைக் கொள்ளத் தவறக் கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/56&oldid=1303472" இலிருந்து மீள்விக்கப்பட்டது