பக்கம்:குற்றால வளம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

75



கம்போன் றில்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு" என்ற அருங்குறள் வலியுறுத்தும். அழுக்காறு என்பது பிறன் ஆக்கம் கண்டு பொறாமை. ஆக்கம் என்பது செல்வம். "அழுக் காறு கொண்டவனிடம் செல்வம் தங்காது; அதுபோல ஒழுக்கமிலானிடம் உயர்வு தங்காது" என்பது இக் குறட்கருத்து. இது முற்றும் உண்மை. ஆனால் இவ்வுலகில் இக் குறட் கருத்துக்கு மாறாக நடப்பதைச் சிலர் எடுத்துக் காட்ட முன்வரலாம். அழுக்காறு கொண்டவர்களுள் ஆக்கம் பெற்றோர் பலரிருக்கின்றனரென்று பகரலாம். ஒருவாறு இஃதுண்மையே. அழுக்காறுடையாரில் பொருள் படைத்தார் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் அப்பொருளின் பயனை அவர்கள் சிறிதும் அடையமாட்டார்கள். பொருள்பெற்ற பயன் நன்மனத்தொடு அறம் புரிதலன்றோ? நல்லுளம் பெற்று அறம் புரியாதார் ஆக்கம் பெற்றதால் அடையும் பயனென்? பயன்தரா ஒன்று இருப்பதும் இல்லாதிருப்பதும் ஒன்றே. ஆக்கத்தால் ஆய பயன் அடையாது வாழும் செல்வர் என்போருக்கும் பொருள் காத்த பூதத்திற்கும் வேறுபாடென்ன? அழுக்கா றென்ற பாபிக்கு உளத்தை இருக்கையாக அளித்தோர்க்கு அறத்தைக் குடிவைக்க உளம் கிடையாதன்றோ? எனவே. ஆக்கத்தின் பயன்தராத ஆக்கமுண்மை அஃதின்மைக்கு நிகரென்றெண்ணியே வள்ளுவனார் இவ்வாறு வகுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/84&oldid=1314543" இலிருந்து மீள்விக்கப்பட்டது