பக்கம்:குற்றால வளம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

வகுப்பு

முடியாது.ஆனால் வேதங்களை வியாசர் மொழிந்தார் என்று கூறப்படுகிறது. இதனால் பலர் கொள்கையும் அடிபட்டுவிடும். வியாசர் சிதைந்துகிடக்க வேதங்களைத் திரட்டி இருக்காதி நான்காக வகுத்தார். "இருக்காதி மறை மொழிந்தோன்" என்று வியாசரைக் கூறுதல் உபசாரமேயாம். சிதைந்து கிடந்ததைத் தொகுத்து விளக்கியமையினாலேயே அவர் அவ்வாறு கூறப்பட்டார். அவ்வாறே ஆன்மாக்களை, இயக்கும் சக்தியாகிய கடவுளே அவற்றை உண்டாக்கினார் என்று கூறும் மரபு தவறுடைத்தன்று.


ஆன்மாக்களை இறைவன் படைத்தானென்றும் படைக்கும்பொழுதே இன்னின்னார் இன்ன வகுப்பெனப் படைத்தானென்றும் கூறுதல் ஏற்றுக்கொள்ளக் தக்கதன்று. கடவுள் நடுநிலை வாய்ந்தவர் என்று உலகில் அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். நடுநிலை வாய்ந்த கடவுள், தாமே புதிதாக உயிர்களைப் படைப்பதானால், தாம் படைத்த உயிர்களுள் ஒன்றை உயர்வுள்ளதாகவும் மற்றொன்றைத் தாழ்வுள்ளதாகவும், ஒன்றைச் செல்வம் பெற்றதாகவும் இன்னொன்றை வறுமையுற்றதாகவும் இன்ன வேறுபாடு பலதோன்ற ஆக்குவரோ? ஆன்மாக்களை யெல்லாம் கடவுள் படைத்தார் என்று கொண்டால் கடவுள் நடுநிலை தவறியவர் என்று ஏற்படும். எனவே ஆன்மாக்களைக் கடவுள் படைக்கவில்லை என்பது உறுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/91&oldid=1315861" இலிருந்து மீள்விக்கப்பட்டது