பக்கம்:குலசேகராழ்வார்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

குலசேகராழ்வார்


போகவேண்டி யிருந்தது. அதனால் ராமாயண ப்ரஸங்கம் செய்வதற்கு அவர் தம் குமாரரை அரண்மனைக்கு அனுப்பியிருந்தார். குமாரரோ ஆழ்வாரின் ராம பக்தியின் சிறப்பை அறியாதவர். பிதாவும், ப்ரஸங்கம் நடத்தும் விதத்தைப்பற்றி ஒன்றுஞ்சொல்ல வில்லை. ஆகையால் அவர் ஸ்ரீ வால்மீகி ராமாயணத்திலுள்ளதை மொழி பெயர்த்து ப்ரஸங்கிக்கத் தொடங்கினார். அன்றையதினம் ராவணன் ஸந்யாஸி வேஷம்பூண்டு ராமபிரானில்லாத ஸமயத்தில் பர்ண சாலைக்கு வந்து ஸீதையை மாயமாய் ஏமாற்றித் தூக்கிச் சென்ற விஷயத்தைப்பற்றிப் புதியவர் ப்ரஸங்கிக்கத் தொடங்கித் தம் கதையை வளர்த்தி வீதைக்கு நேர்ந்த ஆபத்தை விரித்துரைக்கலானார். ஆழ்வார் இக் கதையைக் கேட்டதும் சீறி எழுந்தார். அவருக்கு உண்டான கோபத்துக் களவே யில்லை. அவர், “ இந்த அரக்கனை நான் சும்மா விடுவதில்லை, இப்போதே புறப்பட்டுக் கடலைக் கடந்து அரக்கரெல்லோரையும் போரில் தொலைத்து விட்டுத் திரும்புவேன். பிராட்டியைக் கவர்ந்தவனைக் கொல்லாமல் விடுவதில்லை. ஸீதையை மீட்டு ஸ்ரீராமபிரானிடம் சேர்க்கும் வரையில் என் மனத்திற்கு அமைதி உண்டாகாது” என்று சொல்லி வாளுங் கையுமாய்ப் புறப்பட்டார். தம் ஸேனைகளைத் திரட்டிக்கொண்டு லங்கையை நோக்கி ப்ரயாணமானார். ராமபிரானுக்கு ஸஹாயம் செய்யும் பாக்யம் பெற்றதற்காக அவர் மன மகிழ்ந்தார். அப்போது அவருக்குண்டான ஊக்கத்திற்கும் கிளர்ச்சிக்கும் அளவே யில்லை. இவருடைய மனவுறுதியைக் கண்டு தேவர்க ளுட்பட யாவரும் என்ன நேரிடுமோ என்று அச்சங் கொண்டனர்.