பக்கம்:குலசேகராழ்வார்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

குலசேகராழ்வார்


தமது மனத்தைச் செலுத்துவதில்லை. ஸ்ரீ ரங்க க்ஷேத்ரத்தில் ரங்கநாதன் எழுந்தருளியிருக்கும் சிறப்பைச் சில வைஷ்ணவர்கள் ஆழ்வாருக்குக் கூறினார்கள். அந்த வ்ருத்தாந்தத்தைக் கேட்டதும் அவரது மனம் கரைந்து உருகியது, அப் பெருமானைச் சென்று ஸேவிக்கவேண்டு மென்னும் ஆவல் அதிகரித்தது, உடனே தம் மந்திரிகளை நோக்கி, “அமைச்சர்களே, நான் திருவரங்கம் சென்று ஸ்ரீ ரங்க நாதனை ஸேவித்துவர விரும்புகிறேன். நான் போய்த் திரும்பும்வரையில் நாட்டைச் செவ்வையாய் ஆட்சி புரிந்து வாருங்கள்" என்று சொல்லித் தம் பரிவாரங்களுடன் ப்ரயாணப்பட்டார். அமைச்சர்கள் அரசரை எவ்வளவோ வேண்டியும் அவர் கொண்ட எண்ணத்தை இவர்களால் மாற்ற முடியவில்லை. 'அவர் மனம் செல்லும் வழியே அவரைச் செல்ல விட்டுவிட்டால் அவர் ராஜ்யத்தைப் பற்றிக் கவனிக்கவே மாட்டார். அதனால் அராஜரிகம் ஏற்படும். அது நாட்டுக்குப் பல தீமைகளை விளைக்கும். ஆதலால், அதற்கு இடங் கொடுக்கலாகாது' என்று மந்த்ரிகள் பலவிதமாய் யோசனை செய்து பின்பு ஒரு முடிவிற்கு வந்தார்கள்.

அவர்கள் சில பாகவதரை ஆழ்வாரிடம் அனுப்பினார்கள். அவர்கள் அரசனை அடைந்து, "மன்னரே, உம்முடைய இஷ்டத்திற்கு விரோதமாக நடக்க நாங்கள் கனவிலும் எண்ண மாட்டோம். உங்களுக்கு சாஸ்த்ர வுண்மையை யெடுத்துக் காண்பிக்கவே இங்கு வந்தோம். ஆகையால் நீர் எங்களைப்பற்றி வேறுவிதமாய் நினைக்கவேண்டாம். அவரவர்க்குள்ள