பக்கம்:குலசேகராழ்வார்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

குலசேகராழ்வார்


முடிசூட்டி நாட்டை அவனுக்களித்து ஆழ்வார் ஸ்ரீரங்கம் போய்ச் சேர்ந்தார். அங்கே அரவணையில் வீற்றிருக்கும் நம்பெருமாளை ஸேவித்து ஆநந்தமடைந்தார். அவர் தம் புத்ரியோடும் ஸ்ரீரங்கத்தில் வாஸஞ் செய்கையில் அப்பெண் விவாகபருவத்தை அடைந்தாள். அவள் ஸ்ரீ ரங்கநாதனைத் தவிர வேறெவரையும் மணம்புரிய விரும்பவில்லை. அவளது மனம் ஸ்ரீ ரங்கநாதனிடம் அழுந்திக் கிடந்தது. அவளது காதலை உணர்ந்த பெருமானும் அவளுடைய ப்ரார்த்தனைக்கு இணங்கினார். ஆழ்வார் அவளை அப் பெருமானுக்கு மணம் முடித்துக்கொடுக்க அவரும் க்ருபையோடும் அவளை அங்கீகரித் தருளினார், ஆழ்வாரும் ஸந்துஷ்டராய்ப் பெருமாளை ஸேவித்துக் கொண்டே அந்த ஸ்தலத்தில் சிலகாலம் வாஸஞ் செய்து கொண்டிருந்தார்.

பின்னர் ஆழ்வார் பகவான் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் திவ்யதேசங்களுக்கு யாத்ரைசெய்ய விரும்பினார். அவர் ஸ்ரீ ரங்கத்தினின்றும் புறப்பட்டு, திருப்பதி, அயோத்தி, சித்ரகூடம், திருக்கண்ணபுரம், திருமாலிருஞ்சோலை முதலிய ஸ்தலங்களுக்குச் சென்று அவ் விடங்களிலுள்ள எம் பெருமான்களை ஸேவித்து இன்பமடைந்தார். அவர் ஸம்ஸ்க்ருதத்தில், “முகுந்தமாலை" என்னும் ப்ரபந்தம் இயற்றியது போலவே, தமிழிலும் ஸ்ரீராமபிரானது மஹிமைகளைப் புகழ்ந்து அற்புதமான பாடல்களால், “பெருமாள் திருமொழி" என்னும் ஓர் அரிய நூலை இயற்றி உலகத்தார்க்கு நலம் புரிந்தார். முடிவில் அவர் ப்ரஹ்ம தேசம் என்னும் நகரை அடைந்தார்.