பக்கம்:குலசேகராழ்வார்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலசேகராழ்வார்

7

எல்லாரிடமும் பேரெடுத்து எல்லா நூல்களையும் கற்று மேன்மையுற்று விளங்கினான். அரசர் அவச்யம் கற்க வேண்டிய யுத்தமுறைகளையும், யானையேற்றம், குதிரை யேற்றம், தநுர்வித்தை முதலிய படைக்கலப் பயிற்சியையும், அரசியல் வழிகளையும் குலசேகரன் தன் ஆசிரியரிடமிருந்து அறிந்து அவற்றில் வல்லவனானான். குலசேகரனுக்கு ஸமானமான பிள்ளைகள் ஒருவரும் அக்காலத்தில் இல்லை. அரசன் தனக்குற்ற பாக்யத்தை நினைத்து நினைத்து மனம் பூரித்தான். அவன் தன் குமாரனுடைய திறமையைக்கண்டு அதிசயித்தான். வித்தை முடிந்ததும் த்ருடவரதன் தன் மகனை இளவரசனாக்கி அவனுக்கு முடிசூட்டினான்.


2. அரசுரிமை பெறுதல்

இளவரசுபட்டம் சூடியபின் குலசேகரன் நால் வகை ஸேனைகள் சூழப் புறப்பட்டுப் பகையரசர் மேல் படையெடுத்துச் சென்றான். அவன் தன் வலிமையால் பகைமன்னரை யுத்தத்தில் முறியடித்து வெற்றிபெற்றான். சோழமன்னனும் பாண்டிநாட்டு வேந்தனும் குலசேகரனுடைய ஸைந்யத்தோடு சண்டையிட முடியாமல் தோல்வியடைந்தார்கள். குலசேகரன் எதிரிகளுடைய நாடுகளைத் தன் வசப்படுத்தி அவற்றிற்குத் தலைவனானான். அதனால் அவனுக்குப் பல பட்டங்களுங் கிடைத்தன. அவனுடைய புகழும் நாடெங்கும் பரவிற்று. ப்ரஜைகளுக்கு அவனிடமிருந்த மதிப்பையும் அன்பையும் சொல்லி முடியாது.

புத்ரனுடைய பராக்ரமத்தையும் குடிகள் அவனிடம் காட்டிவந்த மர்யாதையையும் கண்டு