பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/198

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


4. முன்பொருள் எடுத்து வைத்தல் (Aero Dive)

இதில் பங்கு பெறுபவர் முதலில் இருகால்களையும் சேர்த்து நிமிர்ந்த நிலையில் நிற்க வேண்டும். அவர் நிற்கும் இடத்திலிருந்து முன்புறமாக ஏறக்குறைய 6 அங்குல தூரத்தில் ஒரு கைக்குட்டையையோ அல்லது வேறு பொருளையோ வைக்க வேண்டும். இப்பொழுது நிமிர்ந்து நின்று கொண்டிருப்பவர் வலதுகையை முன்புறமாக (நெஞ்சுக்கு நேராக) நீட்டி, பிறகு இடது கையை பின்புறமாக நீட்ட வேண்டும். அதாவது வலது கையும் இடது கையும் ஒரு நேர்கோட்டில் இருப்பது போல நீட்டியிருக்க வேண்டும். அதன்பின் இடது காலை எடுத்து பின்புறமாக வைத்துக் கொண்டு, இப்பொழுது முன்புறமாகக் குனிந்து வலது காலின் முழங்காலை வளைக்காமல், கீழே கிடக்கும் கைக் குட்டையை எடுக்க வேண்டும்.

5. ஒரு காலில் உட்காருதல் (Knee Dip)

இடது காலைத் தூக்கிக் கொண்டு வலது காலில் மட்டும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதன் பின்னர் தூக்கிய இடது காலைப் பின்புறமாகக் கொண்டு சென்று நிறுத்தி, வலது கையால் கணுக்காலைப் (பின்புறத்தில் தான்) கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது வலது காலின் முழங்காலை மெதுவாக மடக்கியவாறு அப்படியே உட்கார வேண்டும். சமநிலை இழக்காமல் உட்கார வேண்டும். அதைப் போலவே இடது காலாலும் உட்கார வேண்டும்.