பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/3

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முகவுரை

இக்காலத்தில் வளர்ந்துள்ள புதிய விஞ்ஞான அறிவுத் துறைகளில் இளமையிலிருந்தே நமது குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்படுமாறு செய்ய வேண்டும். விஞ்ஞான உண்மைகளைப் பற்றிக் குழந்தைகள் புரிந்துகொள்ளுவதற்கு எளிதாக இருக்கும்படியாக அழகான விளக்கப்படங்களுடன் சிறு சிறு கட்டுரைகள் இருந்தால் அவற்றை விருப்பத்தோடு தாமாகவே படிக்க முன்வருவார்கள். இந்த நோக்கத்துடனேயே குழந்தைகள் கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டு வருகிறது.

எல்லாப் பொருள்களைப் பற்றியும் இங்கு எழுதுவதென்பது இயலாது. முக்கியமான சில பொருள்களே இத்திட்டத்தில் இடம்பெறுகின்றன. விஞ்ஞான அறிவை வளர்ப்பதற்கென்றே இது ஏற்பட்டுள்ளதென்றலும் இலக்கியம், கலை போன்ற துறைகளில் சிறப்பான சில பொருள்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

விஞ்ஞான அறிவு பல துறைகளாகப் பிரிந்து, விரித்து வளர்த்திருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் உள்ள முக்கியமான பொருள்கள் எல்லாவற்றையும் இங்கு சேர்ப்பதென்பதும் இயலாது. உதாரணமாக, பறவைகளைப் பற்றியே பல தொகுதிகள் வெளியிடலாம். ஆனால் இங்குச் சிறப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சில பறவைகளைப் பற்றியே தனிக் கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. மற்ற பறவைகளைப் பற்றிப் பொதுவாகத் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள் பறவைகள் என்ற பொதுக் கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும். இவ்வாறே மற்ற துறைகளைச் சேர்த்த பொருள்களும் இங்கு இருக்கக் காணலாம்.

இந்த முயற்சிக்குப் பலர் உதவியிருக்கிறார்கள். கலைக்களஞ்சியம் அச்சிடுவதற்கான உயர்ந்த வகைத் தான்களை யுனெஸ்கோ நிறுவனத்தார் மனமுவத்து அளித்துள்ளனர். கோவை ஸ்ரீ அவினாசி லிங்கம் மனையியல் கல்லூரியினர் இதில் சேர்க்கப்பட்டுள்ள கட்டுரைகள் அனைத்தையும் ஆய்ந்து உதவியதோடு, பல படங்களையும் அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் சில கட்டுரைகளையும் எழுதியுள்ளார்கள். அயல்நாட்டுத் தூதரகங்கள், பல நாட்டுப் பொருட்காட்சிசாலைகள், இந்திய நிறுவனங்கள் இவை யாவும் இக் கலைக்களஞ்சியம் உருவாவதற்குப் படங்களை உதவியுள்ளன. படங்கள் வழங்கியவர்களைப் பற்றிய குறிப்பைத் தொகுதியின் இறுதியில் காணலாம்.

தமிழக அரசாங்கமும் மத்திய அரசாங்கமும் இப்பணிக்கு மிக்க அன்புடன் பொருளுதவி செய்திருக்கின்றன. இம்முயற்சி பலனளிக்கும் பொருட்டு உதவிய அறிஞர்களுக்கும், நிறுவனங்களுக்கும், அரசாங்கங்களுக்கும், அலுவவகத்திற்கு இடம் தந்து உதவிய சென்னைப் பல்கலைக்கழகத்திற்கும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் நன்றி உரித்தாகுக. இந்தக் குழந்தைகள் கலைக்களஞ்சியத்தை அழகாக அச்சிட்டுத் தந்த வடபழதி அச்சகத்தாருக்கும் எம் நன்றி. மேலும் இப் பணி வெற்றி பெறுவதற்கு, திரு. ம. ப. பெரியசாமித்தூரன் தலைமையில் தளராமல் உழைத்துவரும் ஆசிரியர் குழுவினர் அனைவருக்கும், எல்லாவிதங்களிலும் அவ்வப்போது அன்புடன் உதவிபுரியும் ஏனைய அன்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

குழந்தைகளுக்கென வெளியிடப்படும் இக் கலைக்களஞ்சியம் இந்திய மொழிகளில் முதல் முயற்சியாகும். தமிழில் முதல் முறையாக இது வெளியிடப்படுகிறது. முதல் முயற்யொதலால் இப்பணியில் குறைகள் இருக்கலாம். அவற்றைப் பொருட்படுத்தாமல் தமிழ் மக்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறோம். நம் குழந்தைகள் இதைப் படித்து மேம்பாடு அடைவார்களாக.

பல்கலைக்கழகக் கட்டடம்,

சென்னை-5,

1—12—1968 தி. சு. அவினாசிலிங்கம்
தலைவர்,
தமிழ் வளர்ச்சிக் கழகம்