பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/5

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

குழந்தைகள் கலைக்களஞ்சியம்


இது முதல் எழுத்து, மற்ற எழுத்துக்கள் எல்லாம் இந்த எழுத்தையே முதலாகக்கொண்டு இருக்கின்றன, இதை எடுத்துக்காட்டி, திருவள்ளுவர் ஓர் உயர்த்த உண்மையை நமக்கு விளக்குகிறார். எப்படி அ எழுத்துக்கள் என்னும் எழுத்தை அடிப்படையாகக்கொண்டு இருக்கின்றனவோ, அதுபோல உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் இறைவனை அடிப்படையாகக் கொண்டு இருக்கின்றன.

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”

என்பது திருவள்ளுவர் வாக்கு.

அக்பர் (1542-1605): இந்தியாவை ஆண்ட மொகலாய மன்னர்களில் மிகவும் புகழ்பெற்றவர் அக்பர். ஜலாலுதீன் முகம்மது அக்பர் என்பது இவருடைய முழுப்பெயர்.

அக்பர் தம் பதின்மூன்றாம் வயதிலேயே அரசரானார். இவர் சிறந்த வீரர். உடல் வலிமையும், மன வலிமையும் உடையவர். அடக்கமாக வாழ்ந்தார். இவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது; ஆனால், நுட்பமான அறிவு உண்டு. சிற்பம், இசை போன்ற கலைகளில் இவருக்கு விருப்பம் அதிகம். பல கலைஞர்களை ஆதரித்தார்.

அக்பருடைய ராச்சியம் மிகப் பெரியது. இந்தியாவின் வடக்கு, மத்திய பாகங்கள் முழுவதும் இவருடைய ஆட்சியின் கீழ் இருந்தன. சுமார் ஐம்பது ஆண்டுகள் இவர் நாட்டை ஆண்டார். இவர் புரிந்த போர்கள் பல. இவர் செய்த சீர்திருத்தங்களும் பல.

அக்பர் இனம், மதம் என்ற வேற்றுமை இல்லாமல் எல்லா மக்களையும் சமமாக நேசித்தார். இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று விரும்பினார். இந்துக்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டிருந்த வரிகளை நீக்கினார்.

அக்பர் தீன் இலாகி என்னும் ஒரு புதிய மதத்தையே உருவாக்கினார். எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கொள்கைக்ளே இதன் கொள்கைகள். அக்பர் இந்தியாவை ஆண்ட மாபெரும் மன்னர்களில் ஒருவர். இவரை மகா அக்பர் என்று பாராட்டுகிறோம்.