பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதற்கு வங்கி வட்டி தருகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பின் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கென வங்கியில் தவணை முறையில் பணம் போடுவதற்குத் ‘தவணை இருப்பு’ (Recurring Deposit) எனப் பெயர். சிறுசேமிப்பு செய்கின்றவர்கள் வங்கியில் 'சேமிப்புக் கணக்கு' (Savings Account) வைத்துக்கொள்ளலாம். இவை இரண்டுக்கும் வட்டி உண்டு.

நடப்புக் கணக்கும், சிலவகைச் சேமிப்புக் கணக்கும் வைத்திருப்பவர்கள் காசோலை மூலம் பணம் பெறலாம். காசோலை என்பது ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் தமக்கு அல்லது காசோலையைக் கொண்டுவருபவருக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட நபருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுக்கும்படி அந்த வங்கிக்கு இடும் கட்டளையாகும். நாம் வேறொருவருக்குப் பணம் கொடுக்க வேண்டியிருந்தால், அவருக்கு அத்தொகையைக் காசோலையாகவே கொடுக்கலாம். அவர் அக்காசோலையை நம் வங்கிக்குச் சென்றோ அல்லது தம்முடைய வங்கியில் கொடுத்தோ பணமாக மாற்றிக் கொள்ளலாம்.

வங்கிகளில் பலவகை உண்டு. நாட்டிலுள்ள வங்கிகள் அனைத்துக்கும் தலைமையானதாகவும், வழிகாட்டியாகவும் விளங்குவது 'மத்திய வங்கி' (Central Bank). ஒரு நாட்டில் ஒரு மத்திய வங்கிதான் இருக்கும். இதில் பொது மக்கள் கணக்கு வைப்பதில்லை. மத்திய அரசும், மாநில அரசுகளும், வணிக வங்கிகளும், சில நிதி நிறுவனங்களுமே இதில் கணக்கு வைத்துக்கொள்ளலாம். நோட்டு அச்சடிக்கும் உரிமையும் இந்த வங்கிக்கே உண்டு. இந்தியாவில் 'ரிசர்வு வங்கி' (Reserve Bank of India) மத்திய வங்கியாகச் செயல்படுகிறது.


வட அமெரிக்கா : அமெரிக்காக் கண்டத்தின் வட பகுதி வட அமெரிக்கா ஆகும். இது தென் அமெரிக்காவுடன் (த.க.) பானமா பூசந்தியால் இணைக்கப்பட்டுள்ளது. இதன் வடக்கில் ஆர்க்டிக் சமுத்திரமும் கிழக்கில் அட்லான்டிக் சமுத்திரமும் தெற்கிலும் மேற்கிலும் பசிபிக் சமுத்திரமும் உள்ளன. இக்கண்டத்தைச் சுற்றிப் பல தீவுகளும் தீவுக் கூட்டங்களும் இருக்கின்றன.

வட அமெரிக்காவின் நிலப்பரப்பு சுமார் 1,31,40,000 சதுர கிலோமீட்டர். கானடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், மெக்சிக்கோ முதலிய நாடுகள் இதில் அடங்கியுள்ளன. மக்கள் தொகை சுமார் 27 கோடி.

வட அமெரிக்கா

இக்கண்டத்தின் மேற்குக்கரை நெடுகிலும் ராக்கி மலைத்தொடர் உள்ளது. கிழக்குக் கரையில் அப்பலேச்சியன் என்னும் மலைத்தொடர் உள்ளது. இரு மலைத்தொடர்களுக்கும் இடைப்பட்ட பகுதி , மிகப்பெரிய சமவெளியாகும். இச்சமவெளியில் உலகின் மிகப்பெரிய ஆறுகளுள் ஒன்றான மிசிசிப்பி -மிசௌரி பாய்ந்து செழிப்புறச் செய்கிறது. கொலம்பியா, கொலராடோ, ரீயோ கிராண்ட், செயின்ட் லாரன்ஸ், ஹட்ஸன் முதலியன பிற முக்கிய ஆறுகள். கொலராடோ ஆற்றினால் உண்டாகிய கான்யன் படுகையும் (த.க.), நயாகரா ஆற்றில் உள்ள நயாகரா (த.க.) அருவியும் உலகப் புகழ்பெற்றவை.

வட அமெரிக்காவில் பல ஏரிகள் உள்ளன. இவற்றுள், கண்டத்தின் மத்திய பகுதியில் உள்ள சுப்பீரியர் , மிச்சிகன், ஹூரன், ஈரி , ஆன்டேரியோ என்னும் ஐந்து ஏரிகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இவை போக்குவரத்துக்குப் பெரிதும் உதவியாக இருக்கின்றன. கடல் நீரைக்காட்டிலும் அதிக உப்பாக உள்ள பெரிய ஏரி (Great Salt Lake) ஒன்றும் இங்கு உள்ளது.

இக்கண்டத்தின் வட பகுதி, வட துருவத்தை அடுத்திருப்பதால் அங்குக் குளிர் மிக அதிகம்; கடல்நீர் பல மாதங்களுக்கு உறைந்தே இருக்கும். தென்பகுதியில் மிதமான தட்பவெப்பம் நிலவுகிறது. வட பகுதியில் மரங்கள் வளருவதில்லை. கோடையில் மட்டும் வளரக்கூடிய சில செடிகளும் சிறு பூத் தாவரங்களுமே