பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வட கடல் - வடிகுழாய்

11

உண்டு. அதற்குத் தெற்கே ஊசி இலை மரங்கள் வளர்கின்றன. கண்டத்தின் தென் பகுதியில் காடுகள் அதிகம். உலகிலேயே மிக உயரமானதும் மிகப் பழையதுமான செக்குவாயா என்னும் செம்மரங்கள் தென்பகுதியிலுள்ள காலிபோர்னியா பகுதியில் உள்ளன. கோதுமையும் சோளமும் இக்கண்டத்தில் மிகுதியாகப் பயிராகின்றன. பருத்தி, புகையிலை ஆகியனவும் அதிகம். கண்டத்தின் வட பகுதியில் வால்ரஸ், சீல், துருவக் கரடி, பனிமான், நீர்நாய் முதலிய விலங்குகள் காணப்படுகின்றன. சமவெளியில் பலவித மான்களும் காட்டெருமைகளும் வாழ்கின்றன.

வட அமெரிக்காவில் தாதுவளம் மிகுதி. பெட்ரோலியம் எண்ணெய், நிலக்கரி, தங்கம், வெள்ளி, இரும்பு, செம்பு, காரீயம், கல்நார், கந்தகம் முதலியன மிகுதியாகக் கிடைக்கின்றன.

வட அமெரிக்காவின் ஆதிக்குடிகள் எஸ்கிமோக்களும் (த.க.) செவ்விந்தியர்களுமாவர். 1492-ல் கொலம்பஸ் (த.க.) இக்கண்டத்தைக் கண்டுபிடித்த பின் ஐரோப்பியர் குடியேறினர். அவர்கள் அழைத்துவந்த நீக்ரோக்களும் இப்பொழுது இங்கு வாழ்கின்றனர்.


வட கடல் : ஐரோப்பாக் கண்டத்தில் நார்வே, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கும் கிரேட் பிரிட்டன் தீவுகளுக்குமிடையே இருப்பது வட கடல். இது அட்லான்டிக் சமுத்திரத்தின் ஒரு பிரிவு. ஒரு காலத்தில் இப்பகுதி நிலமாக இருந்ததென்றும், தாழ்வான இப்பகுதியில் அட்லான்டிக் சமுத்திரத்தின் நீர் புகுந்து கடலாக மாறியது என்றும் கூறுகின்றனர்.

கப்பல் போக்குவரத்துக்கு இக்கடல் மிகவும் உதவியாக உள்ளது. இதன் காரணமாகப் பல பெரிய துறைமுகங்கள் உருவாகியுள்ளன. லண்டன், ஹல், ஆன்ட்வெர்ப், ராட்டர்டாம், ஹாம்பர்க் முதலியன இவற்றுள் முக்கியமானவை.

வட கடல் ஆழமில்லாதது. இதில் பல ஆறுகள் கலப்பதால் நீர் அதிகமாக உப்புக் கரிப்பது இல்லை. இக் கடலில் மீன்கள் அதிகமாகக் கிடைக்கின்றன.


வட துருவம் : பூமியின் வட பகுதிக்கு மையமாக இருப்பது வட துருவமாகும். பூமியின் எந்தப் பகுதியிலிருந்தேனும் வடக்கு நோக்கிச் சென்றுகொண்டேயிருந்தால் வட துருவத்தை அடையலாம்.

வட துருவத்திற்கு நேர் எதிராக உள்ளது தென் துருவம் (த.க.). வட துருவம் ஆர்க்டிக் சமுத்திரத்தில் இருக்கிறது. தென்துருவம் அன்டார்க்டிகா (த.க.) என்ற நிலப்பகுதியில் உள்ளது. இரு துருவங்களிலும் எப்போதுமே பனி உறைந்திருக்கும்.

உறைபனி, கடுங்குளிர் போன்ற பல இடையூறுகளைக் கடந்து சிலர் வடதுருவத்திற்குச் சென்று ஆராய்ந்துள்ளார்கள். முதன்முதலாகச் சென்றவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பியரி (த.க.) என்ற ஆராய்ச்சியாளர். இவர் 1909-ல் வடதுருவத்தை அடைந்தார். இவருக்குப் பின் பல நாட்டினரும் வடதுருவத்திற்குச் சென்று ஆராய்ச்சி நடத்தினார்கள்.

வட துருவ-தென் துருவ அச்சில் தான் பூமி சுழல்கிறது. இந்த அச்சு நேர் செங்குத்தாக இல்லை; 23½° சாய்ந்திருக்கிறது. பூமி சூரியனைச் சுற்றிவர ஓராண்டு காலமாகும். இந்த ஓராண்டில், ஆறு மாதம் பூமியின் தென்துருவம் சூரியனை நோக்கிச் சாய்ந்திருக்கும்; வட துருவம் சூரியனுக்கு எதிர்ப்புறம் சாய்ந்து மறைந்திருக்கும். அந்த ஆறு மாதமும் வட துருவத்தில் சூரியனைக் காணவே முடியாது.

அடுத்த ஆறு மாத காலத்தில் வட துருவம் சூரியனை நோக்கிச் சாய்ந்திருக்கும். அப்போது தென் துருவத்தில் சூரியன் தெரிவதில்லை. இவ்வாறு ஒவ்வொரு துருவத்திலும் ஆறு மாதம் பகலாகவும், ஆறு மாதம் இரவாகவும் இருக்கும். பார்க்க: அன்டார்க்டிகா; ஆர்க்டிக் வட்டம்; இரவும் பகலும்; தென் துருவம்.


வடிகுழாய் ( Siphon ) : ஒரு பாத்திரத்திலுள்ள நீரை வேறொரு பாத்திரத்தில் ஊற்ற, அதை அப்படியே தூக்கிச் சாய்க்கலாம். ஆனால் நீருள்ள பாத்திரம் நிலையாகவோ, சாய்க்க முடியாத அளவுக்குப் பெரிதாகவோ கனமாகவோ இருந்தால் இம்முறை பயன்படாது. அதற்கு வேறோர் எளிமையான வழி உண்டு.'Ὠ' வடிவிலுள்ள ஒரு குழாயைக் கொண்டு ஒரு பாத்திரத்திலுள்ள நீரையோ, வேறு எந்தத் திரவத்தையோ மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றலாம். இந்தக் குழாய்க்கு வடிகுழாய் என்று பெயர். வடிகுழாய் மூலம் உயரமான மட்டத்திலிருந்து தாழ்வான மட்டத்திற்கே ஒரு திரவத்தை மாற்ற முடியும். படத்தில் காட்டியுள்ளதுபோல் வடிகுழாயின் புயங்கள் வெவ்வேறு அளவினதாக இருக்கவேண்டும். குழாயின் இரு முனைகளும் திறந்தே இருக்கும். A எனும் பாத்திரத்திலுள்ள நீரை B எனும் பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும் என்று