பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

வாட்டிக்கன் - வாண வேடிக்கை

ஒன்றாக அணி சேர்ந்து நெப்போலியனைத் தோற்கடித்தன. அதனால் 1814-ல் இவர் தம் பதவியைத் துறக்க நேர்ந்தது. எல்பா என்ற தீவில் இவர் சிறை வைக்கப்பட்டார். அங்கிருந்து 1815-ல் தப்பி, ஒரு படையைத் திரட்டிக்கொண்டு பெல்ஜியத்தைத் தாக்கினார். பிரிட்டன், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நேச நாடுகளின் படைகளுடன் தனித்தனியே அவர் போரிட நேர்ந்தது. எனினும், தொடக்கத்தில் சிறிது வெற்றி கண்டார். ஆனால், இறுதியில் வாட்டர்லூவில் மே 18-ல் நடந்த போரில் நேச நாட்டுப் படைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நெப்போலியன் படையை முறியடித்தன. இப்போரில் நேச நாடுகளுக்கு வெற்றி தேடித் தந்தவர் வெல்லிங்க்டன் என்னும் ஆங்கிலத் தளபதியாவார்.

தோல்வியுற்ற நெப்போலியன் அமெரிக்காவுக்குத் தப்பிச் செல்ல முயன்றார். ஆனால், ஆங்கிலேயர் அவரைக் கைது செய்து, செயின்ட் ஹெலினா என்ற தீவில் சிறை வைத்தனர். அங்கு நெப்போலியன் தம் இறுதிக் காலத்தைக் கழித்தார்.


வாட்டிக்கன் நகரம் : கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவினரான கத்தோலிக் கர்களுக்குத் தலைவர் போப்பாண்டவர். இவர் வாழும் இடம் வாட்டிக்கன் நகரம். இத்தாலி நாட்டின் தலைநகரான ரோம் நகரின் நடுவில் இது அமைந்துள்ளது. எனினும் இது ஒரு தனிச் சுதந்தர நாடாக விளங்குகிறது.

வாட்டிக்கன் நகரின் பரப்பு சுமார் 4,45,000 சதுர மீட்டர். இதனைச் சுற்றி மதில் எழுப்பப்பட்டுள்ளது. இதனுள் போப்பாண்டவரின் அரண்மனையும் கிறிஸ்தவக் கோயில்களும் மற்ற கட்டடங்களும் உள்ளன. சுமார் ஆயிரம் மக்கள் வாழ்கிறார்கள். அனைவரும் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்தவர்கள். போப்பாண்டவரின் நிருவாகத்திற்குட்பட்ட தனி இராச்சியமாக வாட்டிக்கன் நகரம் உள்ளது. போப்பாண்டவரே இதன் தலைவர். இந்த இராச்சியத்திற்கென்று தனிக் கொடி உள்ளது. தனி நாணயங்களும் அஞ்சல் தலைகளும் உண்டு. தனி நீதிமன்றமும் காவல் துறையும் உள்ளன. இங்கு ஓர் ஒலிபரப்பு நிலையமும் உள்ளது.

இங்குள்ள செயின்ட் பீட்டர் கோயில் புகழ்பெற்றது. இதுவே உலகிலுள்ள கிறிஸ்தவக் கோயில்களிலெல்லாம் மிகப் பெரியது. மிகச் சிறந்த பொருட்காட்சி சாலையும் கலைக்கூடமும் இங்கு உள்ளன. இந்நகரில் ஒரு பெரிய நூலகம் உள்ளது. உலகிலுள்ள சிறந்த நூலகங்களுள் ஒன்றாக இது மதிக்கப்படுகிறது.

இத்தாலியின் மத்திய பகுதியில் போப்பாண்டவரின் நிருவாகத்திற்குட்பட்ட இராச்சியங்கள் சில இருந்தன. 1929-ல் இத்தாலி முழுவதும் ஒரே நாடாக. அமைக்கப்பட்டபோது, இவற்றின் நிருவாகம் குறித்துப் போப்பாண்டவருக்கும் இத்தாலிய அரசாங்கத்திற்கும் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி, அந்த இராச்சியங்களின் மீதிருந்த உரிமையைப் போப்பாண்டவர் விட்டுக்கொடுத்தார். அதற்குப் பதிலாக, ரோம் நகரில் போப்பாண்டவர் தனியாக ஒரு இராச்சியம் அமைத்துக்கொள்ள இத்தாலிய அரசாங்கம் உடன்பட்டது. இவ்வாறு ஏற்பட்டதே வாட்டிக்கன் நகரம்.


வாண வேடிக்கை : திருவிழாக்களின் போதும், சுதந்தர நாள், குடியரசு நாள் போன்ற நாட்களிலும் வாண வேடிக்கையைப் பார்த்திருப்பீர்கள். வாணங்களின் திரியில் தீ வைத்ததும் அவற்றிலிருந்து நீர் வீழ்ச்சி போன்று மிகுந்த பிரகாசத்துடன் தீப்பொறி விழும். சில வாணங்கள் வானத்தில் சென்று வெடிப்பதால் பலத்த ஓசை கேட்கும். மற்றும் சில வாணங்கள் வெகு உயரம் சென்று அழகிய வண்ணங்களுடன் கூடிய நட்சத்திரங்களை உதிர்க்கும். உயரே சென்று பல வடிவங்களாகவும், எழுத்துகளாகவும் எரியும் வாணங்களும் உண்டு. இவற்றைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.

வாண வேடிக்கை