பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

89

133 அப்பா! வஸ்திரங்கள் வேனிற்காலத்தில் உலர்வது போல் மழைக்காலத்தில் உலர்வதில்லையே அதற்குக் காரணம் என்ன?

தம்பி! எப்பொழுதும் ஜலம் ஆவியாக மாறிக் காற்றில் கலந்துகொண்டிருக்கிறது என்பதை அறிவாய். ஓர் அறையில் எத்தனைபேர் இருக்கலாமோ அதற்கு அதிகமான பேர் வந்தால் இடம் இல்லை என்று கூறுவார்கள். அது போல் காற்றும் ஆவியை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு அளவு உண்டு. அதற்குமேல் ஏற்றுக்கொள்ளாது. பெரிய அறையில் அதிக ஜனங்கள் இருக்கலாம். சிறிய அறையில் அதிக ஜனங்கள் இருக்கமுடியாது. அதுபோல் உஷ்ணமான காற்று அதிகமான நீராவியை ஏற்றுக்கொள்ளும். குளிர்ந்த காற்று அப்படி ஏற்றுக்கொள்ளாது.

வேனிற் காலத்தில் காற்று உஷ்ணமாயிருக்கிறது அதனால் அதிகமான நீராவியை ஏற்றுக்கொள்ளும். அதனால் தான் அந்தக் காலத்தில் ஈர வஸ்திரங்கள் அதிசீக்கிரத்தில் உலர்ந்துவிடுகின்றன. அதாவது அதிலுள்ள ஜலம் சீக்கிரமாக நீராவி ஆகிவிடுகிறது. ஆனால் மழை காலத்தில் காற்று குளிர்ந்திருக்கும். அதனால் நீராவியை ஏற்றுக் கொள்ளாது. ஆதலால் அந்தக் காலத்தில் வஸ்திரங்கள் உலர்வதற்கு அதிக நேரமாகும்.

134 அப்பா! சில நாட்களில் ஈரவஸ்திரம் உலர்ந்து போகிறது, சிலநாட்களில் உலர்ந்த வஸ்திரம் ஈரமாய் விடுகிறது. அதற்குக் காரணம் என்ன?

ஆமாம். கோடை காலத்தில் ஈர வஸ்திரங்கள் சீக்கிரமாக உலர்ந்து போகின்றன. அந்தக் காலத்தில் காற்று உஷ்ணமாயிருப்பதால் அதிகமான நீராவியை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது. அதனால் ஈர வஸ்திரங்களில் உண்டாகும் நீராவி காற்றில் போய்விடுகிறது.