பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

143

அதைக் கொண்டு குத்துவதை "தார் போடுவது” என்றும் கூறுவார்கள், ஆனால் அப்படிக் குத்துவது தவறு. அதனால் மாட்டுக்கு அதிக நோவு உண்டாகும். அதன் உடம்பில் இரத்தம் வந்து புண்ணாய்ப் போகும். சில இடங்களில் உழவர்கள் தார்க்கம்பு மட்டுமே வைத்துக்கொண்டு உழுவார்கள். அந்த மாடுகளின் பின்புறம் முழுவதும் ஒரே புண்ணாய் இருக்கும். எவ்வளவு இரக்கமற்ற காரியம் பார்த்தாயா?

216 அப்பா! சக்கரங்களுக்கு டயர் போடுகிறார்களே அதற்குக் காரணம் என்ன?

தம்பி! மாட்டு வண்டியிலும் குதிரை வண்டியிலும் சக்கரங்களுக்கு இரும்புப் பட்டைதான் போடுகிறோம். அதனால் வண்டியில் போவது கஷ்டமாய் இருக்கிறது. அதோடு சக்கரங்கள் ரோட்டில் உராய்வதால் வண்டி வேகமாய் ஓட முடிவதில்லை. அதை உணர்ந்து 1888-ம் வருஷத்தில் டன்லப் என்பவர் ரப்பர் டயர் என்பதைக் கண்டுபிடித்தார்.

அதன் உள்ளே ஒரு மெல்லிய ரப்பர் குழாய். அதில் காற்றைத் திணித்து வைக்கிறார்கள். அந்தக் குழாயைக் கனமானதும் பலமானதுமான ரப்பர் குழாய் ஒன்று பாதுகாக்கிறது. இந்த டயரைச் சக்கரங்களுக்குப் போடுவதால் வண்டி துள்ளித் துள்ளிப் போகிறது. அதனால் வண்டியில் பிரயாணம் செய்யச் சௌகரியமாய் இருக்கிறது. அதோடு வண்டியும் விரைவாகப் போகிறது. டயர் இல்லாவிட்டால் கார்கள் இவ்வளவு விரைவாகப் போகமுடியாது. டயரில் ஏதேனும் ஒரு சிறு துவாரம் ஏற்பட்டு விட்டால் அப்பொழுது காற்று வெளியே ஓடி விடுகிறது, கார் போகமாட்டாமல் நின்று விடுகிறது. இதை நீ பார்த்திருக்கிறாய் அல்லவா?