பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

149

காண்போம். அதனால்தான் வீடு பூட்டியிருந்ததே, இவ்வளவு தூசி எங்கிருந்து வந்தது என்று ஆச்சர்யப்படுகிறோம்.

225 அப்பா! கூரைக்குப் போடும் தகரம் வளைந்து வளைந்து இருக்கிறது, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! கூரை போடும்பொழுது மரக்கைகள் போட்டு அதன்மீது தகரத்தை ஆணி அறைந்து இறுக்கி வைப்பார்கள். தகரம் தட்டையாக இருந்தால் மழை பெய்யும் பொழுது ஜலம் தகரம் முழுவதிலும் பரவியே பாயும். அதனால் மழை நின்றபின் ஆணியுள்ள இடங்களில் ஜலம் தேங்கி, ஆணி துருப்பிடிக்க இடமாகும். ஆனால் வளைந்து வளைந்துள்ள தகரத்தைப் போட்டால், உயரமான பாகத்தில் ஆணி அடிப்பார்கள். மழை ஜலம் பள்ளமான பாகத்தின் வழியாகப் பாயும். அதனால் ஆணியில் ஜலம் தங்காது. துரு ஏறாது. அதனால் தகரத்தில் துவாரம் உண்டாகி உள்ளே ஜலம் இறங்க மார்க்கம் உண்டாகாது.

226 அப்பா! சில வீடுகளில் கூரையருகிலும் ஜன்னல்கள் இருக்கின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! நாம் சுகமாய் இருக்கவேண்டுமானால் நமக்குச் சுவாசிக்க நாமிருக்குமிடத்துக்கு நல்ல சுத்தமான காற்று வரவேண்டும். அதைச் சுவாசித்து வெளிவிடும் அசுத்தமான காற்று நாம் இருக்குமிடத்திலிருந்து வெளியே போய் விடவும் வேண்டும். நாம் மூச்சுவிடும் காற்றும் நீராவியும் உடம்பிலிருந்து வருவதால் உஷ்ணமாக இருக்கும். உஷ்ணமான காற்று எப்பொழுதும் குளிர்ந்த காற்றைவிடக் கனக் குறைவாயிருக்கும். அதனால் அதுமேலே கிளம்பும். அப்படி மேலே கிளம்பும் காற்று வெளியே செல்லுவதற்காகத் தான் கூரையருகில் ஜன்னல்கள் வைக்கப்படுகின்றன. அவ்விதமாக அசுத்தமான உஷ்ணக் காற்று வெளியேறுதால் சுத்தமான குளிர்ந்த காற்று உள்ளே வர முயலும்.