இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தம்பிப் பையன் சிறுபையன்!
தாமரை மலரைப் போற்கையன்!
தம்பிப் பையன் சிறுபையன்!
தங்கக் கட்டி போல்மெய்யன்! 1
கண்மலர் காட்டி அழைத்திடுவான்!
கைம்மலர் நீட்டி அழைத்திடுவான்!
உண்ணும் போழ்து முதுகேறி
உலுக்கிக் குலுக்கி ஆட்டிடுவான்! 2
கோலை எடுத்தே அடித்திடுவான்!
கோழி விரட்டிச் சிரித்திடுவான்!
நூலை எடுத்துக் கிழித்திடுவான்!
நுனிப்புல் காட்டிப் பழித்திடுவான்! 3
அக்காள் சடையைப் பிடித்திழுப்பான்!
அம்மா உடையைக் கடித்திழுப்பான்!
சொக்காய் போட்டு நடைகாட்டித்
துள்ளித் துள்ளிக் குதித்திடுவான்! 4
84 ♦ கவிஞர் வாணிதாசன்