பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/180

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தத்தி நடந்து தளிர்க்கை நீட்டி
‘அக்கா’ என்றதும் அழகுத் தமிழாம்!
பத்தரை மாற்றுப் பொன்னே! தமிழே!

இத்தரை மக்களும் இன்றும் உன்னை
இறைஞ்சி வணங்கிப் பயிலுதல் கண்டேன்!
சித்திரைத் தென்றலே! வணக்கம் வணக்கம்! 4

துள்ளித் திரியும் துடுக்கு நாட்களில்
புள்ளியிற் பயின்றது பைந்தமிழ் மொழியாம்!
உள்ளம் இனிக்கும் அமிழ்தே! தமிழே!

வள்ளலை வளர்த்தோய்! வரைபயன் நிறைத்தோய்!
எறிகடல் முத்தே! மணியே! வாழி!
உள்ளம் உருகி வணங்குவன் தாயே! 5

பூத்த சோலைப் பூவண் டோடு
புதரிடை ஆடி இசைத்ததும் தமிழாம்!
காய்த்த பலாவே! கரும்பே! தமிழே!

மேத்திசை கீழ்த்திசை விரிகடல் சூழ்ந்த
எத்திசை எங்கும் நடத்தினாய் அரசு!
வாழ்த்தி வணங்குவன் வணங்குவன் அம்மா! 6

அகமும் புறமும் உலகுக் களித்தாய்!
அணியாம் சிலம்பு குண்டலம் மேகலை
திகழ அணிந்தாய் திருவே! தமிழே!

பகைவர்க் கருளிப் பண்பினை வளர்த்தாய்!
தொகைதொகை யாக நூல்பல அளித்தாய்!
நகைமுகத் தமிழே! வணக்கம், வண்க்கம்!


குழந்தை இலக்கியம் ♦ 163