பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மதிப்புரைகள்

குழந்தைகளின் உள்ளத்தை அறிந்து நல்வழியில் அவ்வப்போது திருப்பிவிட்டால் நாட்டிலுள்ள பல பிரச்னைகள் மறையலாம். எனவே, சிறியவர்களுக்கு நல்ல பண்புகள் ஏற்படச் செய்வதே பெரியவர்களுக்குள்ள தலைமையான கடமை. சிறுவர்க்கு நல்ல எண்ணங்களும் பரந்த மனப்பான்மையும் உண்டாவதற்கு அன்னவர்க்கேற்ற புத்தகங்கள் வகை வகையாக வர வேண்டும். பாட்டுக்கள் குழந்தைகளின் உள்ளத்தை ஈர்க்கத்தக்க வகையில் அமைந்து விட்டால், சிறுவர்களின் உள்ளத்தில் அவை பதிந்து என்றென்றும் நிலைபெற்று நிற்பதுடன், அவர்களுடைய வாழ்க்கையை நேரிய போக்கில் கொண்டு. செலுத்தும் சக்தியைப் பெற்றுவிடும். இதை உணர்ந்த சிலர் இக்காலத்தில் குழந்தைகளுக்கான நல்ல பாட்டுக்களை இயற்றிப் புத்தகமாக வெளியிட்டு வருகிறார்கள். இத்துறையில் வாணிதாசன் கைவரப்பெற்றிருக்கிறார் என்று துணிந்து கூறலாம்.


அன்னை சொல்லைக் கேள்என்றும்
அதிலே நன்மை உண்டென்றும்,
அன்னை சொல்லே. பொன்சொல்லாம்
அமிழ்தம் அமிழ்தம் தேன்சொல்லாம்

என்று ‘தாய் சொல் கேள்’ என்பதில் கவிஞர்பாடியிருப்பது நன்றாக அமைந்திருக்கிறது.

மற்றும் விளையாட்டுக்கள், விலங்குகள், பறவைகள், கல்வி, தமிழ்நாடு, தமிழின் சிறப்புப் பற்றிய பாட்டுக்களும் பாராட்டத்தக்க வகையில் உள்ளன. இந்நூல் குழந்தைகளுக்கான நல்ல இலக்கியம்

தினமணி 2.10.59